நாமக்கல் ஜூன் 23: நாமக்கல், உழவர் சந்தையில் 61.9 டன் காய்கறிகள், ரூ.27.89 லட்சத்திற்கு விற்பனையானது.
நாமக்கல் கோட்டை மெயின்ரோட்டில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், கொல்லிமலையை சேர்ந்த விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்களை கொண்டு வந்து வியாபாரம் செய்கின்றனர். வார விடுமுறை நாட்களில், வழக்கத்தை விட சந்தையில் வியாபாரம் அதிகம் நடைபெறும். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து தேவையான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்வார்கள். தற்போது, ஆனி மாதம் திருமண சீசன் துவங்கியுள்ளதால், வழக்கத்தை விட நேற்று உழவர் சந்தையில் வியாபாரம் அதிகம் நடைபெற்றது. உழவர் சந்தைக்கு மொத்தம் 202 விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் 48,190 கிலோ காய்கறிகள், 13,710 கிலோ பழங்கள், 25 கிலோ பூக்கள் என மொத்தம் 61,925 கிலோ கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதன் விற்பனை மதிப்பு ரூ.27.89 லட்சம் இருக்கும் என உழவர்சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர். காலை முதலே உழவர் சந்தைக்கு ஏரளாமனோர் காய்கறிகளை வாங்க வந்ததால், சந்ைத களை கட்டி காணப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.