கொள்ளிடம், மே 29: கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் கிராமத்தில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி இறங்கு தளத்தை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து 2020-2021 ஆண்டிற்கான பட்ஜெட்டில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கொடியம்பாளையம் கிராமத்தில் நபார்டு திட்டத்தில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க அறிவிப்பு வௌியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவுற்ற நிலையில், நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மீன்பிடி இறங்கு தளம், படகு அணையும் சுவர், மீன் ஏலமிடும் கூடம், வலை பின்னும் கூடம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர்கள் ஜெயபிரகாஷ், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், மீன்வளத்துறை ஆய்வாளர் துரைராஜ், மீன்வளத்துறை அதிகாரிகள், மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.