சேலம், மே 27:சேலம் கருங்கல்பட்டியில் ரூ.2.53 லட்சம் குட்காவை பதுக்கி வைத்து விற்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மற்றொருவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் கருங்கல்பட்டியில் உள்ள பள்ளி அருகே சிலர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் எஸ்ஐ தமிழ்மணி தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஒரு வீட்டில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தனர்.
அங்கு சென்று சோதனையிட்டபோது, மூட்டைகளில் 340 கிலோ குட்கா இருந்தது. இதன்மதிப்பு ரூ.2.53 லட்சமாகும். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்த சேலம் காடையாம்பட்டி அருகேயுள்ள பன்னப்பட்டியை சேர்ந்த மூர்த்தி மகன் பிரவீன்குமார் (24) என்பவரை சுற்றி வளைத்து பிடித்து, கைது செய்தனர்.
பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் பிரவீன்குமாரின் கூட்டாளியான விஜயகுமார் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.