கூடுவாஞ்சேரி, மே 29: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பழமை வாய்ந்த மீன் மார்க்கெட்டை இடித்து அகற்றிவிட்டு, அங்கு, ரூ.2.25 கோடியில் புதிய மீன் மார்க்கெட் அமைப்பதற்காக ஏற்பாடுகளை, நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பழமை வாய்ந்த மீன் மார்க்கெட்டில் 34 கடைகள் உள்ளன. இதனை இடித்துவிட்டு கலைஞர் மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் புதிய மீன் மார்க்கெட் அமைக்கும் வரை கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் உள்ள நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் தற்காலிக மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பழமை வாய்ந்த மீன் மார்க்கெட் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனை திமுக நகர மன்ற தலைவர் கார்த்திக்தண்டபாணி, துணை தலைவர் லோகநாதன், நகராட்சி ஆணையாளர் ராணி, பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.