நாகப்பட்டினம், ஜூன் 2: நாகப்பட்டினம் நகராட்சியில் கடந்த 4 ஆண்டு காலத்தில் ரூ.166 கோடியே 91 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு நகராட்சியை தரம் உயர்த்தப்பட்டுள்ளது என நகர்மன்ற தலைவர் மாரிமுத்து கூறினார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று தமிழக மக்களுக்கு ஏற்ப நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் இந்தியாவில் உள்ள பிற மாநில முதல்வர்கள் வியக்கும் வண்ணம் இந்த திட்டங்கள் அமைந்துள்ளது. தமிழக முதல்வரின் திட்டங்களை பிற மாநில முதல்வர்களும் பின்பற்றும் வகையில் அமைந்துள்ளது.
நான்காம் ஆண்டில் பல சாதனைகளை புரிந்த முதல்வர் 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். முதல்வரின் சாதனை வரிசையில் நாகப்பட்டினம் நகராட்சியும் இடம் பெற்றுள்ளது என நகர்மன்ற தலைவர் மாரிமுத்து கூறியுள்ளார். நாகப்பட்டினம் நகராட்சி ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பில் 2.340 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15 பேவர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நகர்புற இளைஞர்களின் அறிவை பெருக்கி கொள்ள கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பில் நாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு தினந்தோறும் ஏராளமான இளைஞர்கள் வந்து பல்வேறு நூல்களில் இருந்து குறிப்புகள் எடுத்து சென்று போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வருகின்றனர்.
ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பில் ஆசாத் மார்கெட் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 44 எண்ணிக்கையிலான சாலைகள் 10.19 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.9 கோடியே 26 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ளது. மூலதன மானிய குழு நிதியில் இருந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அபிவிருந்தி பணிகள், நகரின் முக்கிய பகுதிகளில் நடைபாதை மற்றும் பேவர் பிளாக் ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஜன் விகாஸ் கார்யாகிராம் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் யாத்ரீகர்கள் தங்குவதற்காக சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது. அம்ரூத் திட்டத்தின் கீழ் ரு.68 கோடியே 21 லட்சம் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நகர பகுதி முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மூலதன மானிய குழு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நாகூர் சில்லடி கடற்கரை மேம்படுத்தப்பட்டுள்ளது.
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 கோடியே 40 லட்சம் மதிப்பில் நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை செல்லூர் பகுதியில் புதிய புற நகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்தவுடன் வெளியூர்களில் இருந்து நாகப்பட்டினத்திற்கு வருகை தரும் பஸ்கள் பயணிகளை சிரமம் இன்றி ஏற்றி செல்லவும், இறங்கி விடவும் அமையும். இதனால் எதிர்காலத்தில் நாகப்பட்டினம் நகர பகுதி விரிவாக்கம் அடையும்.
நாகப்பட்டினம் நகராட்சியில் 195 பணிகள் ரூ.166 கோடியே 91 லட்சம் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு சில பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு சில பணிகள் நடந்து வருகிறது. நாகப்பட்டினம் நகராட்சி மீது முதல்வர் மிகுந்த அக்கரை கொண்டு இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்தவுள்ளார் என கூறினார்.