திருத்தணி, ஜூலை 6: பொதட்டூர்பேட்டையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகள் விரைவில் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, பொதடூர்பேட்டை பேரூராட்சியில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொதட்டூர்பேட்டைக்கு வந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். 1980ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து, திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், சென்னை, வேலூர், சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில், பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகள் பலவீனமடைந்த நிலையில், பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் இயக்கம் மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, பேருந்து நிலையத்தில், பழைய கடைகள் அகற்றி ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாக கட்டிடம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 18 கடைள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பேருந்து நிலையத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையத்தில் இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு மேற்கூரை பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதிய வணிக வளாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், விரைவில் வியாபாரிகளின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மழை மற்றும் வெயிலுக்கு பயணிகள் அவதிப்படுவதை தடுக்க பேருந்து நிலையம் முழுமையாக மேற்கூரை அமைத்து மூடப்பட்டு, வசதிகள் மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மு.பிரதாப் உத்தரவின் பேரில், மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயக்குமார் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த 30 நாட்களில் பணிகள் முழுமை பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ராஜகுமார் தெரிவித்துள்ளார்.