தர்மபுரி, ஜூன் 4: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தரமபுரி அருகே நல்லம்பள்ளி வாரச்சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் பிரதிவாரம் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று நடந்த வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடு விற்பனை களை கட்டியது. நேற்று அதிகாலை முதல் 9 மணி வரை ஆடு, மாடுகள் விற்பனை நடந்நது. இந்த சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் ஆடு, மாடுகளை வாங்கவும், விற்கவும் வந்தனர். மேலும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் கால்நடைகளை வாங்க வருகின்றனர். இந்நிலையில், பக்ரீத் பண்டிகை வரும் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், ஆடுகள் வரத்தும், விற்பனையும் அதிகரித்திருந்தது. குரும்பாடு, வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வந்தனர். ரூ.5ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை ஆடுகள், இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
0