Monday, July 15, 2024
Home » ருசித்துப் புசி!

ருசித்துப் புசி!

by kannappan

நன்றி குங்குமம் தோழி உணவே மருந்துநம்மில் எத்தனை பேருக்கு சாப்பிட தெரியும்? இதென்ன கேள்வி? யாருக்காவது சாப்பிடத் தெரியாமல் இருக்குமா? என்று நினைக்க வேண்டாம். என்ன சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிடக்கூடாது என்று அதிகமாக பேசப்பட்டு வரும் சூழலில், எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியாமல்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.இன்றைய தேதியில், காலையில் அலுவலகம் / பள்ளி கிளம்புபவர்கள் ஒருவராவது நிதானமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோமா? நகரங்களில் வாழும் சிலர் போகும் வழியில் ரயிலிலும், பஸ்ஸிலும் உணவை அள்ளித் திணித்துக் கொள்ளும் காட்சிகளையும் நாம் தினசரி பார்த்து பழகி இருப்போம்.போதாதற்கு தெருவோர வண்டிக்கடைகளாகட்டும் அல்லது மிகப்பெரிய ரெஸ்டாரண்டுகளிலும் பஃபே சிஸ்டம் என்ற பெயரில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது. எதிரில் இருப்பவருடனோ அல்லது போனில் பேசிக்கொண்டே சாப்பிடுவது என நாம் இவ்வாறு உணவு உண்ணும் விஷயத்தில் பல தவறுகளை செய்கிறோம்.‘அள்ளித் திணிச்சா அற்பாயிசு… நொறுங்கத் தின்னா நூறாயிசு’, ‘ருசித்துப் புசி’ என்பவை நம் முன்னோர் சொல்லி வைத்த அனுபவ மொழிகள். அதாவது நன்றாக மென்று சாப்பிடாமல் வெறுமனே உணவை அள்ளித் திணித்தால் ஆயுசு குறையும். அதுவே உணவை பற்களால் நொறுக்கி சாப்பிடும் போது நூறு ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். உணவை விருப்பத்துடன் ரசித்துச் சாப்பிடவேண்டும். ‘சாப்பிட வேண்டுமே’ என்று சலிப்புக் கொள்ளக் கூடாது. இப்படி மனத்தில் உண்டாகும் சலிப்பு வயிற்றையும் பாதிக்கும் என்பதுதான் அவற்றின் பொருள்.சரி எப்படித்தான் சாப்பிடுவது? இந்தக் கேள்விக்கு விளக்கமளிக்கிறார் உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ்…உணவை இப்படித்தான் உண்ண வேண்டும் என்ற விதி இருக்கிறது. உணவு செரிமானம் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை பல கட்டங்களாக நடக்கிறது. உமிழ்நீரில் இருக்கும் ஒருவிதமான நொதி (Enzyme) வாயிலிருந்தே உணவு செரிமானத்தை தொடங்கிவிடுகிறது.இந்த நொதி நிறைந்த உமிழ்நீருடன் உணவை நன்றாக கலந்து மென்று உண்பதால், 50 சதவீத உணவு செரிமானம் வாயிலேயே நடந்துவிடும். உணவு சரியாக மெல்லப்படாவிட்டால், இரைப்பை நமது உணவை செரிக்க வைப்பதற்காக அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும். அசிடிட்டி தொந்தரவு ஏற்படுவது கூட உணவை கூழாக்குவதற்காக அமிலச் சுரப்பு அதிகம் சுரப்பதனால்தான். சாப்பிடும்போது, பேசிக்கொண்டு சாப்பிட்டால் உணவை நன்றாக மெல்ல முடியாது. வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டால்தான் உமிழ்நீர் சுரக்கும். உமிழ்நீரில் இருக்கும் Lysozyme; என்னும் Enzyme-ற்கு கிருமிகளை அழிக்கும் தன்மையும் இருக்கிறது.தரையில சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடுவது மிகச்சிறந்த முறை. டைனிங்டேபிளில் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ சாப்பிட்டால் ரத்த ஓட்டம் இரைப்பை நோக்கி செல்லாமல் கால்களுக்கு சென்று விடும். தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால், வயிற்றுப்பகுதி அமுங்கி, ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்கு சென்று, வயிற்றின் இயக்கு தசைகள் வேலை செய்ய ஆரம்பிக்கும். உட்கார்ந்து மெதுவாக சாப்பிடுவதால், சீக்கிரமே வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். அதிகப்படியாக உண்ணமாட்டோம். இதனால் அதிக கலோரிகள்எடுத்துக் கொள்வதும் தடுக்கப்படும்.மாறாக, நின்று கொண்டு வேகவேகமாக சாப்பிடும்போது, போதும் என்ற திருப்தியைத் தரக்கூடிய Letin ஹார்மோன் திறம்பட செயல்படுவதற்கான நேரத்தை கொடுக்காது. இதனால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். அது நமது Body Mass Index (BMI) குறயீட்டை அதிகரித்துவிடும். சரியாக மென்று சாப்பிடாமல் இருப்பது, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு (Irritable Bowl Syndrome) வழி வகுக்கும்.ஓர் உணவை எத்தனை முறை மெல்ல வேண்டும் என்பது; உணவைப் பொறுத்து மாறுபடும்.உதாரணமாக காய்கள், பழங்கள் என்றால், ஒரு பத்து முறை மென்றால் போதும். அதுவே, கடினமான உணவுகள், இறைச்சித் துண்டுகள் என்றால் ஒரு 30 முறையாவது மென்று சாப்பிட வேண்டும். ஆனால், நாம் அப்படியா சாப்பிடுகிறோம். உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால் பற்களுக்கும் பலம் கிடைக்கும்.ரத்த சர்க்கரை கட்டுப்பாடு அல்லது கிளைசெமிக் கட்டுப்பாடு மெல்லும் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். இந்த எளிய வாழ்க்கை முறை மாற்றத்தை செய்வதால், நீரிழிவு நோயின் வலுவான குடும்ப வரலாறு உடையவர்கள்; நீரிழிவின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் மற்றும்; நீரிழிவு நோய்க்கான பிற ஆபத்து காரணிகளைக் கொண்டவர்களுக்கும், நீரிழிவு நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக இருக்கும். கிளைெசமிக் குறியீட்டை குறைக்க வேண்டுமானால், கட்டாயம் மென்று உண்ணும் அளவை அதிகரிக்க வேண்டும்.உணவின் கிளைசெமிக் குறியீடானது, ஒரு உணவை முழுசாக வேகவைத்து உண்பது, வறுப்பது, மாவாக அரைப்பது அல்லது நீராகாரமாக குடிப்பது என்பதைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, ராகியை கஞ்சியாக குடித்தால் அதை மெல்ல வேண்டிய அவசியம் இருக்காது, அதையே அடை அல்லது தோசையாக செய்து சாப்பிட்டால் மெல்லும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் அது ஆரோக்கியமானதாக இருக்கும்.நார்ச்சத்து மிகுந்த எந்த ஒரு உணவையும் அது; தானியமோ, பருப்பு வகையோ, காய்கறிகளோ, பழங்களோ எதுவாக இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் மென்று உண்பதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அரிசி சாதமாக இருந்தால் அதை எளிதில் மென்று வேகமாக சாப்பிட்டுவிடுவோம். அதுவே சப்பாத்தி என்றால் அதை கொஞ்சம் கொஞ்சமாக மென்றுதான் சாப்பிட முடியும் என்பதால் அதிக நேரம் எடுத்துக் கொள்வோம்.ஒரு தனிநபர் நாளொன்றுக்கு, எடுத்துக் கொள்ளும் 1000 கலோரிகளில் குறைந்தபட்சம் 20 கிராம் அளவிலாவது கரையக்கூடிய அல்லது கரையாத நார்ச்சத்து உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூட்ரிஷன் வலியுறுத்துகிறது. ஒரு நாளைக்கு 5 முறை எடுத்துக் கொள்ளும் உணவில், பழங்கள், காய்கறி, கீரை மற்றும் முழு தானியங்கள் என ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி அளவாவது எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் தட்டில் கால்பாகம் முழுதானியமும், மீதியுள்ளவற்றில் பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும்கீரைகள் இருக்க வேண்டும்.சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக்கூடாது. தண்ணீரின் குளிர்ச்சித் தன்மை உணவுப்பாதையை சுருங்க வைத்துவிடும். உணவியலில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், சாப்பிடும்போது தண்ணீர் எடுத்துக் கொள்ளாமலோ அல்லது குறைந்து 200 மிலி அளவே நீர் குடித்தவர்களிடத்தில்; கண்காணித்தபோது அவர்களுடைய உணவுக்கு பிந்தைய (Postprandial) ரத்த சர்க்கரை அளவு 25-30 மிலி கிராம் அளவிற்குகுறைந்திருப்பதை கண்டறிந்தோம்.ஒருவருக்கு நீரிழிவு நோய் அல்லது உடல் பருமன் நோய் குறித்த வலுவான குடும்ப வரலாறு இருந்தால், எப்போதும் காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையே 11 மணி டீ இடைவேளை அல்லது மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு இடையே 4 மணியளவில் என இரண்டு உணவு இடைவெளிகளுக்கு; இடையில் பழம் சாப்பிட வேண்டும். ஒருபோதும் உணவோடு அல்லது உணவு உண்டவுடன் பழங்களை சேர்க்கக்கூடாது.அதுவும், நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருக்கும்பட்சத்தில், ஒருபோதும் ஒருவேளை உணவுக்கு மாற்றாக பழத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.கூடியவரை இரவு உணவை குறைவாகவும், படுக்கைக்கு செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பும் உண்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். படுக்கும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.மகாலட்சுமி

You may also like

Leave a Comment

eighteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi