தஞ்சாவூர், ஆக. 18: ராயமுண்டான்பட்டி கிராமத்தில் 77 ஆண்டுகால குடிநீர், சுடுகாடு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட மாவட்ட நிர்வாகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும் ராமச்சந்திரன் கூறியதாவது: தஞ்சை மாவட்டம், வெண்டையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராயமுண்டான்பட்டி புது தெருவில் ஒடுக்கப்பட்ட மக்கள் 55 வீடுகள் உள்ளன. சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு கடந்த 77 ஆண்டுகளாக குடிநீர் வசதி, நிரந்தர சுடுகாடு வசதி செய்து தரப்படவில்லை. இவர்களுக்கு, உடனடியாக குடிநீர் வசதி, நிரந்தர சுடுகாடு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் தலையிட வலியுறுத்தி ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை பூதலூர் தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து, ஆகஸ்ட் 14 ம் தேதி மாலையே புது தெருவில் குடிதண்ணீர் கிடைப்பதற்கான வேலைகள் துவக்கப்பட்டது.
தற்காலிக சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தரவும், இரண்டு மாத காலத்தில் நிரந்தரமான சுடுகாடு கொட்டகையுடன் அமைத்து தரவும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதை உரிய காலத்தில் அமைத்து தர வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கையை ஏற்று உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் வசதி மற்றும் சுடுகாடு வசதி அமைத்து தர ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பூதலூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கட்சியின் சார்பிலும் கிராமவாசிகள் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.