ராயக்கோட்டை, மே 20: ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே தைலமர தோப்பில் கூட்டமாக வாழும் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தினமும் 20 கி.மீ., உணவு தேடி செல்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில் நிலையத்தை ஒட்டி தைலமர தோப்பு உள்ளது. இந்த தைல மரங்களில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கியுள்ளன. இரவு நேரத்தில் இரைதேடிச்செல்லும் வவ்வால்கள், பகல் நேரத்தில் மரங்களின் கிளைகளில் தொங்கியபடி கத்திக்கொண்டு இருக்கும். தினமும் ரயில் நிலையம் வருவோர் தைல மரங்களில் தொங்கிக்கொண்டு இருக்கும் வவ்வால்களை பார்த்து வியந்தவாறு செல்கின்றனர்.
மாலை 6 மணியானதும் கூட்டம் கூட்டமாக பறந்து செல்லும் வவ்வால்கள், சுமார் 20 கி.மீ., தூரம் வரை இரைதேடி செல்கிறது. பாதாம், ஆலம் உள்ளிட்ட மரங்களில் தஞ்சமடையும இந்த வவ்வால்கள் மீண்டும் அதிகாலை 5 மணிக்கு ரயில் நிலையம் வந்து, தைல மரங்களில் தஞ்சமடைகின்றன. இப்பகுதி மக்களுக்கு அந்தி சாய்ந்த நேரம் மற்றும் பொழுது விடிந்த காலை வேலையை ஞாபகமூட்டும் வகையில் கீச் கீச் என கத்திக்கொண்டு இருக்கும் வவ்வால்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்கின்றனர்.