ராயக்கோட்ைட, ஜூலை 7: ராயக்கோட்டையில், விளைச்சல் குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.30க்கு விற்பனையாகிறது. ராயக்கோட்டையில், காய்கறிகள் சாகுபடிக்கு அடுத்து தக்காளி சாகுபடி பிரதானம். இப்பகுதி விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளியை சாகுபடி வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக தக்காளி கிரேடு ரூ.200க்கு குறைவாகவே விற்றது. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் விளைச்சல் திடீரென குறைந்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக விலை அதிகரித்து வருகிறது. நேற்று 25 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.750க்கு விற்பனையானது. அதே போல், ஆந்திரா போன்ற மற்ற பகுதிகளிலும் விளைச்சல் குறைந்துள்ளதால், வெளியூர் தக்காளி வியாபாரிகள் ராயக்கோட்டை மண்டிகளுக்கு வந்து தக்காளியை வாங்க ஆரம்பித்துள்ளனர். தற்போது கிரேடு தக்காளி ரூ.750க்கு மொத்த கொள்முதலாக வாங்கினர். அதன்படி கிலோ ரூ.30ஆக அதிகரித்துள்ளது.
ஓசூர்: ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், விளைச்சல் குறைந்த நிலையில், ஓசூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.30க்கும் வெளி மார்க்கொட்டில் ரூ.35க்கும் விற்பனை செய்யப்படுகிறது.