ராமேஸ்வரம், ஆக.15: ராமநாத சுவாமி கோயில் சுவாமி அம்பாள் நேற்று காலையில் ராமர்பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். இதனால் நேற்று முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருவிழாவின் 17ம் திருநாளான நேற்று சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு நேற்று காலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனால் நேற்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடைதிறந்து 2.30 மணி முதல் 3 மணிவரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பூஜா காலங்கள் சாயரட்சை பூஜை வரை நடைபெற்று அதன்பின் காலை 6 மணிக்கு சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர்.
சுவாமி மண்டகப்படிக்கு செல்லும் வீதிகளில் உள்ளூர் பக்தர்கள் தேங்காய், பழம், மாலை கொடுத்து சுவாமியை வழிபட்டனர். மேலும் அன்னதானம், மோர், பானகம் யாத்திரைகளுக்கு வழங்கினர். மாலை 5 மணிக்கு தீபாராதனை முடிந்து மண்டகப்படியில் இருந்து கோயிலுக்கு எழுந்தருளினர். இதனால் நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திருக்கோயில் நடை அடைக்கப்பட்டது. இதனால் கோயில் ரதவீதி முற்றிலும் வெறிச்சோடி காணப்பட்டது.