Tuesday, February 27, 2024
Home » ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி அனுமதி பெறாததால் நேரடி ஒளிபரப்புக்கு தடை: பந்தல்கள் அதிரடியாக அகற்றம்

ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி அனுமதி பெறாததால் நேரடி ஒளிபரப்புக்கு தடை: பந்தல்கள் அதிரடியாக அகற்றம்

by Ranjith

 

காஞ்சிபுரம், ஜன. 22: ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரத்தில் நேரடியாக ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டதையடுத்து, இதற்காக அமைக்கப்பட்ட பந்தல்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய காஞ்சிபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே பாஜவினர் திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ஒரு வார காலமாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் பெரிய அளவில் பந்தல்கள் அமைத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அமர்ந்து ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவைக் காண பிரம்மாண்ட எல்இடி திரை அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் காவல் துறை, பொது பணித்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இதற்கு அனுமதி வழங்க மறுத்ததால் பந்தல்கள், எல்இடி திரை மற்றும் விளக்குகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் பாஜவினர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று நேரடி ஒளிபரப்பை காண திட்டமிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை மாமல்லபுரம் வந்தார்.

இதனையடுத்து, இரவில் காஞ்சிபுரம் வந்த அவர், ஸ்ரீ உபாநிஷாத் மடத்திற்கு சென்றார். பின்னர், புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. சிறப்பு தரிசனம் செய்த அவருக்கு, கோயில் சார்பில் மாலை மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், இரவில் காஞ்சிபுரத்தில் தங்கிய அவர் இன்று காலை அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அதற்காக அமைக்கப்பட்ட எல்இடி திரையில் பொதுமக்களுடன் அமர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, சிறப்பு தரிசனம் மேற்கொள்கிறார்.

You may also like

Leave a Comment

twenty + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi