ராமநாதபுரம், மே 5: ராமநாதபுரத்தின் முக்கிய பகுதியான ஜி.ஹெச் சாலை, கேணிக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், நிரந்தரமாக தானியங்கி சிக்னல் அமைத்தும், போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை-ராமேஸ்வரம் சாலையில் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் காலை முதல் இரவு 10 மணி வரை அதிகமான வாகனங்கள் வந்து செல்கிறது. மருத்துவமனை வளாகத்திற்கு ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகளின் உறவினர்களின் வாகனங்கள் என நாள் தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது.
இந்நிலையில் இப்பகுதி சாலையோரங்களில் பெரிய ஜவுளிகடை, வணிக வளாகங்கள், கடைகள் இருப்பதால் வாடிக்கையாளர்கள், வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துகின்றனர். இதுபோன்ற காரணங்களால் இந்த வழித்தடத்தில் பள்ளி,கல்லூரி, அலுவலக நேரங்கள் மற்றும் இரவு 9 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல், இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் நோயாளிகளின் வாகனங்கள் வாகன நெரிசலில் சிக்கி வருகின்றன.
இதற்கிடையில் டூவீலர்களில் வருவோர் கிடைக்கின்ற இடைவெளியில் புகுந்து,போக்குவரத்து விதிமுறைகளை மீறி அச்சுறுத்தும் வகையில் செல்வதால் பொதுமக்கள் நடந்து கூட சாலையை கடக்க முடியாமல் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. ராமநாதபுரம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து தேவிப்பட்டிணம் செல்லும் சாலை, அரண்மனையில் இருந்து ஓம் சக்தி நகர் வழியாக கலெக்டர் அலுவலகம் செல்லும் நகரின் முக்கிய சாலை வழித்தடத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் கேணிக்கரை அமைந்துள்ளது. இப்பகுதி மற்றும் செட்டியார் தெரு, முனியம்மாள் முக்குரோடு, ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் அதிகமாக உள்ளது.
இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அதிகமாக வந்து செல்வதால், இச்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே ஜி.ஹெச் ரோடு மற்றும் கேணிக்கரை பகுதியில் போக்குவரத்தினை சரி செய்ய நிரந்தரமாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும். மேலும் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.