ராமநாதபுரம், ஆக.31: ராமநாதபுரத்தில் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முருகேசன் எம்எல்ஏ ஆகியோர் பேசினர். கூட்டத்தில், செப்.11ம் தேதி பரமக்குடியில் நடைபெறும் தியாகி இமானுவேல்சேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக மூத்த நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், பொதுமக்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருவதால், அரசின் சாதனைகளை எடுத்து கூறி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீத வெற்றி இலக்காக கொண்டு நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை களப்பணியாற்ற வேண்டும்’ என்றார். இதில் ராமநாதபுரம் யூனியன் சேர்மன் பிரபாகரன், நகராட்சி சேர்மன் கார்மேகம், திமுக மாநில மகளிர் அணி துணை தலைவர் பவானிராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.