ராமநாதபுரம்,ஆக.27: ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளர்(ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரி(ஆண்,பெண்) பணிக்கான எழுத்துத் தேர்வு, நேற்று பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் வாணியில் உள்ள வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 மையங்களில் நடைபெற்றது.
காலை 10 முதல் 12.30 மணி வரை பொது எழுத்துத்தேர்வும், பகல் 3.30 முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தகுதித் தேர்வும் நடைபெற்றது. காலையில் நடந்த தேர்வுக்கு 4,114 ஆண்கள் மற்றும் 921 பெண்கள் என 5,035 பேர் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 4,205 பேர் மட்டும் தேர்வில் பங்கேற்றனர், 830 பேர் தேர்வுக்கு வரவில்லை. பிற்பகலில் நடந்த தமிழ் தகுதித் தேர்வுக்கு 5,134 ஆண்கள், 1096 பெண்கள் என 6,230 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 5,105 பேர் தேர்வில் பங்கேற்றனர், 1,125 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களை ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.