மூணாறு, நவ. 8: மூணாறு அருகே ராணுவ வீரர் காய்ச்சலில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் மூணாறு அருகே உள்ள எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(34). ராணுவ வீரரான இவர் 9 ஆண்டுகளாக காஷ்மீரில் பணி புரிந்து வந்தார். இவர் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன்காரணமாக அவர் மூணாறு நகரில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை திடீரென சுரேஷ்க்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது உறவினர்கள் சுரேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மீண்டும் சுரேஷ்க்கு வலிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அவரது உடல் இடுக்கு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.