ராஜபாளையம், ஆக.31: ராஜபாளையம் அருகே சேத்தூர் கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வழிபாட்டு குழுவில் பொறுப்பாளராக உள்ளார். இவர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தனது குழுவினருடன் கோவிலுக்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்வதற்காக ரூ.25 ஆயிரத்தை பையில் எடுத்துக்கொண்டு தனது உறவினர்கள் 2 பேருடன் நேற்று முன்தினம் மாலை ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
முன்பதிவு செய்யும் இடத்திற்கு அருகே அமர்ந்து விண்ணப்பத்தை எழுதி விட்டு தான் கொண்டு வந்த பையை இருக்கையில் வைத்துவிட்டு முன்பதிவுக்காக உறவினர்களுடன் வரிசையில் நின்றார். அப்போது ரயில் பயணிகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் தனலட்சுமி இருக்கையில் வைத்திருந்த பையை பணத்துடன் திருடிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்மநபர் தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் சண்முகசுந்தர பாண்டி(50) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தகவலறிந்த ராஜபாளையம்(தெற்கு) குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து ரூ.24 ஆயிரம் மற்றும் கைப்பையை பறிமுதல் செய்தனர்.