ராஜபாளையம், நவ.11: ராஜபாளையத்தில் தொடர் மழையால் சாலை சேதமடைந்து தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ராஜபாளையம் நகர் பகுதியில் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மழை காரணமாக பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாறுகால் வசதி இல்லாததால் இந்த அவலநிலை நீடிக்கிறது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலையில் புகார் அளித்தும் வியாபாரிகள் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில் சாலையில் உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.