ராஜபாளையம், ஆக.23: ராஜபாளையத்தில் உள்ள உழவர்சந்தையை முறையாக பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவு உழவர் சந்தையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் பொதுமக்களும் விவசாயிகளும் உழவர்சந்தையை பயன்படுத்த தயங்கி வருகின்றனர். குறிப்பாக உழவர்சந்தையில் உள்ள மரங்களில் அதிகளவு பறவைகள் தங்கியுள்ளன.
இவை அதிகளவு எச்சங்களை வெளியிட்டு வருவதால் சந்தையில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தேவையற்ற மரக்கிளைகளை அகற்றி சந்தையை முறையாக பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உழவர் சந்தையை பயன்படுத்துவோர் கூறுகையில், கடந்த திமுக ஆட்சியில் கலைஞரால் துவக்கப்பட்ட உழவர் சந்தை சிறந்த முறையில் செயல்பட்டு வந்தது. கடந்த ஆட்சியில் போதுமான பராமரிப்பு இல்லை. தற்போது உழவர் சந்தை பகுதியில் குளிர்சாதன அறை என பல வசதிகளை செய்து கொடுத்தும் சுற்றி பழமையான மரங்கள் அடர்ந்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது.
மேலும் மரக்கிளைகள் அடர்ந்த பகுதியில் பறவைகள் கூட்டம் கூட்டமாய் தங்கி அதிக அளவு எச்சங்களை விடுவதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் ஏற்படும் அளவிற்கு இருந்து வருகிறது. ஆதலால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உழவர் சந்தையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். ஆகவே பழமையான மரங்களின் கிளைகளை அகற்றி பாதுகாப்பான சுற்று சுவர்களை அமைத்து உழவர் சந்தையை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.