ராஜபாளையம், செப். 3: ராஜபாளையம் உழவர்சந்தையில் வேளாண் இயக்குநர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உழவர்சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மாலை நேரத்தில் செயல்படும் ஒரே உழவர் சந்தை இதுவாகும். இங்கு காய்கறிகள், பலசரக்கு, பழக்கடைகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த உழவர்சந்தைக்கு ராஜபாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களது காய்கறிகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். குறைந்த விலையில் தரமான காய்கறிகள் கிடைப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், இங்கு காய்கறி விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா என வேளாண் இயக்குநர் ரமேஷ் மற்றும் வேளாண் அலுவலர் மகாலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காய்கறிகள், பழங்கள், உணவு வகைகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.