ராஜபாளையம், ஆக.22: பெண்ணின் ஏடி எம் கார்டை திருடி ரூ.1.10 லட்சம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சம்மந்தபுரம் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி. முன்னாள் ராணுவ வீரர். கொலை வழக்கில் சிறையில் உள்ளார். இவரது மனைவி மாலதி(51). இவர் கடந்த வாரம் பணம் எடுப்பதற்காக பாஸ்புக்கை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்றார்.
அப்போது, வங்கி கணக்கில் இருந்து ஏடிஎம் கார்டு வாயிலாக ரூ.1,10,500 எடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டிற்கு வந்து ஏடிஎம் கார்டை தேடி பார்த்த போது திருடு போனது தெரியவந்தது. இது குறித்து வடக்கு காவல் நிலையத்தில் மாலதி புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதில் வீட்டை சுத்தம் செய்ய உதவியாக இருந்த இனாம்செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த பால்பாண்டி(24) என்பவர், ஏடிஎம் கார்டை திருடி பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பால்பாண்டியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.