ராஜபாளையம், ஆக.23: ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டன. இதனால் பறவைகள் இரை தேடி அலைகின்றன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதன் காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் பல மாதங்களாக இப்பகுதியில் மழை இன்றி வருவதால் பறவைகள் இரைதேடி சுற்றித் திரிகின்றன.
தமிழ்நாடு அரசால் நெல்லிற்கு போதிய விலை கிடைப்பதன் காரணமாக சில விவசாயிகள் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து வறண்ட விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்சி ஆர்வத்துடன் நெல் நடுவதற்கான பணிகளை தொடங்கி வருகின்றனர். உழவு மேற்கொண்டு தண்ணீர் பாயும் விவசாய நிலங்களில் பறவைகள் அதிக அளவில் இரை தேடி வந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்து வரும் நிலையில் இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளன. அவற்றை தூர்வாரி விவசாயத்திற்கும் மற்றும் பறவைகள் மற்றும் விலங்கினங்களுக்கு மழை நீர் சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.