ராஜபாளையம் ஜூன் 30: ராஜபாளையத்தில் விவசாய கழிவுகளை சாலையோரங்களில் குவித்து தீவைப்பதால் ஏற்படும் புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். ராஜபாளையம் முடங்கியார் சாலையில், விவசாய விளைபொருட்களை சாலையில் உலர வைத்து அதனை பிரித்தெடுத்து, அதில் ஏற்படும் கழிவுகளை சாலையோரங்களில் கொட்டி, அதில் தீ வைத்து விடுகின்றனர்.
சாலையோரங்களில் குப்பைகள் எரிக்கப்படும் போது, அதில் இருந்து வெளியேறும் புகையால் அந்த வழியாக இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்போர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் அப்பகுதி முழுவதும் புகைமண்டமலாக மாறி விடுவதால், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. ஆகையால் சாலையோரங்களில் கழிவுகளை தீவைத்து எரிப்பதை தடுக்க வேண்டும் எனவும், உடனடியாக கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.