திருச்சி, செப்.4: தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் மேட்டூரில் இருந்து திறக்கப்படும் உபரி நீரானது கடலுக்குச் சென்று வீணாவதை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலுக்குச் சென்று வீணாகின்ற காவிரி நீரை சேமித்து வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்த ராசி மணலில் தமிழக அரசு ஒரு புதிய அணை கட்ட வேண்டும். எனவே இதனை வலியுறுத்தி விரைவில் சென்னை கோட்டை முன்பாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சம்பா சாகுபடி தொடங்க இருக்கின்ற நிலையில் வரிசை நடவு செய்கின்ற நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு பத்தாயிரம் ரூபாய் மானியம் அறிவிக்க வேண்டும் என முதலமைச்சரை ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொண்டார். ஆர்பாட்டத்தில் லால்குடி ஒன்றிய துணைத் தலைவர் தங்கராஜ், நகர தலைவர் ஏபிடி குணசீலன், நகர செயலாளர் மில்டன், நகரத் துணைத் தலைவர் வரதன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.