ராசிபுரம், ஆக.3:ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி ஏரியில் தீ விபத்து ஏற்பட்டது. 4 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரிந்த தீயை, தீயணைப்பு துறையினர் 2 மணிநேரம் போராடி அணைத்தனர். ராசிபுரம்-சேந்தமங்கலம் சாலையில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோனேரிப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் வறண்டதால், சீமை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து இருந்தது. தற்போது மழையில்லாததால் ஏரியில் இருந்த தண்ணீர் படிப்படியாக குறைந்து, தற்போது ஒருசில பகுதிகளில் மட்டும் குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த ஏரியில் கோழி கழிவுகள், குப்பைகள், பயன்பாடற்ற பொருட்களை மர்ம நபர்கள் வீசி செல்வதால், குப்பை மேடாக உள்ளது.
ஏரியில் கடந்த மாதங்களில் அதிகளவில் தண்ணீர் இருந்ததால், சீமை கருவேல மரங்கள் காய்ந்து கருகியது. தற்போது தண்ணீர் இல்லாததால் சிலர் மரங்களை வெட்டி விறகாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை ஏரியில் குப்பை இருந்த பகுதி தீப்பற்றி எரிந்தது. மர்ம நபர்கள் தீ வைத்தனரா அல்லது புகைபிடித்து விட்டு தூக்கி எறிந்து விட்டு சென்றனரா என்பது தெரியவில்லை. தீ பரவி குப்பைகள், கருவேல முட்களில் பற்றி 4 மணி நேரத்திற்கு மேலாக கொளுந்து விட்டு எரிந்தது.
அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.