ராசிபுரம், ஜூன் 2: ராசிபுரத்தில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. விவசாயிகள் பயிர் சாகுபடி பணிகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளனர்.
இந்நிலையில் ராசிபுரத்தில் பகுதியில் நேற்று காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போல இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இந்நிலையில், நேற்று மாலை, வானில் கருமேகங்கள் திரண்டு வந்தது. சிறிது நேரத்தில் சாரல் மழை பரவலாக பெய்தது. தொடர்ந்து ஒருமணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த கனமழையால் சாலைகளில் வாகன போக்குவரத்து தடைபட்டது. இந்த திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசியது. விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.