திருவண்ணாமலை, ஏப். 16: திருவண்ணாமலையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 92 பேரை போலீசார் கைது செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவசர அவசரமாக அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. மேலும், உடனடியாக அவர் தங்கியிருந்த அரசு குடியிருப்பையும் காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டது. எனவே, ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கை திட்டமிட்ட செயல் என்றும், ஜனநாயகத்துக்கு எதிரான செயலில் பாஜக அரசு செயல்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பதவி பறிப்பு தொடர்பான நடவடிக்கைக்கு எதிராக, ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்நிலையில், ராகுல்காந்தியின் பதவி பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாஜக அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நேற்று மாலை காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஜி.குமார் தலைமையில் நடந்த போராட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்ேபாது, திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலை, திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மணியளவில் மறித்து காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். ரயில் தண்டவாளத்தில் படுத்தும், ரயிலை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் ரயில் மறியலில் ஈடுபட்ட 92 பேரை கைது செய்தனர். பின்னர், ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட அனைவரும் நேற்று மாலை 6 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். ரயில் மறியல் போராட்டத்தால், ராமேஸ்வரம் ரயில் சுமார் சிறிதுநேரம் தாமதமாக திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இதேபோல் திருவண்ணாமலை வடக்கும் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆரணி அடுத்த களம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜெ.பொன்னையன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பதியில் இருந்து களம்பூர் வழியாக விழுப்புரம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ராகுல் காந்தி வசித்து வந்த அரசு குடியிருப்பு பங்களாவை காலி செய்தது, எம்பி பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தகவல் அறிந்து வந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் கோகுல்ராஜன், புகழ் ஆகியோர் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையொடுத்து அரைமணி நேரத்திற்கு பின்னரே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றதையொடுத்து, ரயிலை இயக்க அனுமத்தித்தனர். அதன்பின்னரே, அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்றது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை ரயில் நிலையத்தில், ராகுல்காந்தியின் பதவி பறிப்பு நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. ஆரணி அடுத்த களம்பூர் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி மாட்ட தலைவர் வி.பி. அண்ணாமலை தலைமையில் கட்சியினர் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.