பரமக்குடி,ஆக.23: பரமக்குடியில் இருந்து ஐந்துமுனை ரோடு வழியாக இளையான்குடி செல்லும் ஓட்டப்பாலம் விலக்கு ஆபத்தான நிலை உள்ளதால் அங்கு ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் இருந்து செல்லும் ஓட்டப்பாலம் வழியாக இளையான்குடி மற்றும் ஐந்து முனை ரோடு இப்பகுதியில் ரோடு விரிவுபடுத்தப்பட்ட நிலையில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன.
இந்நிலையில் அப்பகுதியில் இருந்த பழமையான புளிய மரம் வெட்டப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே திரவுபதி அம்மன் கோயில் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. மேலும் ஓட்டப் பாலம் ரோட்டில் இரு புறங்களிலும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகிறது. இதனால், கொண்டை ஊசி வளைவான இப்பகுதியில் வாகனங்கள் எதிர் எதிர் திசையில் செல்லும் போது விபத்து அபாயம் உள்ளது. எனவே இங்கு சிறிய அளவிலான ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.