மதுரை, மே 19: வாடிப்பட்டி அருகே கடந்த 17ம் தேதி மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் அதிவிரைவு ரயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது, ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 65 வயது முதியவர் மீது ரயில் மோதியது. இதனால் உடல் சிதறிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மதுரை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் மோதியதில் இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து எந்த விபரமும் தெரியவில்லை. இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார், அவரது விபரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.