திருவள்ளூர், ஜூலை 5: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் கடந்த தொழிலாளி ரயில் மோதி பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் ஆசூரி தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ், அங்குள்ள இனிப்பகத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நாகராஜ் தனது மனைவி சுப்ரஜா, மகன் மோகன் ஆகியோருடன் சென்னைக்கு செல்ல திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். சென்னை செல்லும் மின்சார ரயில் 3வது நடைமேடையில் இருப்பதை அறிந்த நாகராஜ் 1வது நடைமேடையில் இருந்து இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, மைசூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நாகராஜ் மீது மோதியது. இதில், நாகராஜ் உடல் சிதறி பலியானார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி சுப்ரஜா, மகன் மோகன் ஆகியோர் அழுது புரண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரயில் மோதி தொழிலாளி பலி
0