வேலூர், அக்.29: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ரயில், பஸ், கார்களில் பட்டாசுகளை எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இப்பண்டிகையை மிக பாதுகாப்பான முறையில் கொண்டாட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்யவும், குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்க நேரமும் நிர்ணயித்து கொடுத்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பட்டாசு பொருட்களை ரயில், பஸ்களில் எடுத்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசு கிடங்குகள் மற்றும் பட்டாசு கடைகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக பட்டாசு தயாரிக்கும் இடங்கள் மற்றும் பட்டாசு கடைகளில் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும், அவசர கால வழி உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்ற படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டாசு கிடங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தால், அந்த கிடங்குகள் மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு நலன் கருதி பட்டாசு பொருட்களை ரயில்கள், பஸ்கள், வாடகை உள்ளிட்ட வாகனங்களில் எக்காரணம் கொண்டு எடுத்து செல்லக்கூடாது. இதை மீறி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிறப்பு தணிக்கை குழுக்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இக்குழுவினர், ரயில், பஸ் நிலையங்கள், டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.