மதுரை, நவ. 20: ரயில் பயணங்களின்போது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் சென்றால் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்லுதல், ரயில்வேச் சட்டம் 1989ன் 67, 164 மற்றும் 165 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரியது. பண்டிகைக் காலங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தெற்கு ரயில்வே, ரயில்கள் மற்றும் நிலையங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கு எதிராக தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இதன்மூலம் ரயில்களில் அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை உருவாக்குதலை நோக்கமாக கொண்டுள்ளது. இதன்படி, ரயில் பயணத்தில் பட்டாசுகள், காஸ் சிலிண்டர்கள், அமிலம், பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் பிற அபாயகரமான பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு ரூ.1,000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.
இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், இது தொடர்பாக பார்சல் போர்ட்டர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் ஊழியர்கள், பார்சல் ஊழியர்கள், பேட்டரி கார் ஊழியர்கள், நிலையங்களில் உள்ள கேட்டரிங் ஊழியர்கள், போர்ட்டர்கள் மற்றும் அவுட்சோர்ஸ் ஊழியர்கள், பயணிகளிடம் விழிப்புணவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.