மதுரை, ஜூன் 4: விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ஆறுமுகம் (39). தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக குடும்பத்துடன் ராமேஸ்வரம் செல்வதற்காக கடந்த 1ம் தேதி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு வந்தார். அப்போது தனது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ெசல்ேபான் காணாமல் போனது குறித்து மதுரை இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சந்தேகப்படும்படியாக 2 பேர் சுற்றித்திரிந்தது தெரிந்தது.
இவர்களை அடையாளம் கண்டுபிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து(32), விருதுநகர் மாவட்டம் ஆனைகுட்டம் குருசாமி (எ) பாலகுரு(41) என்பதும் தெரியவந்தது. மது குடிப்பதற்கு பணம் தேவைப்பட்டதால், செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.