சென்னை, நவ.2: ரயில் நிலையங்களில் மோதல் விவகாரத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் 26 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மின்சார ரயில், பஸ்களில் செல்லும் கல்லூரி மாணவர்களிடையே அவ்வப்போது கோஷ்டி மோதல் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், மோதலில் ஈடுபட்ட சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் 26 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இவர்கள் அனைவரும் கடந்த ஓராண்டில் சென்னை பெரம்பூர், கும்மிடிப்பூண்டி, கடற்கரை ரயில் நிலையங்களில் குழுவாக சேர்ந்து மோதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அந்த வகையில் இவர்கள் மீது எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட ரயில்வே போலீஸ் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் கல்லூரியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது கல்லூரியின் விதிகளில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதுதொடர்பான விவரங்களை ரயில்வே போலீசார் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கியதாகவும், அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள், அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பு பெற்றோருடன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
மாணவர் அளிக்கும் நேர்மையான விளக்கத்தின் அடிப்படையிலும், அவரின் வருகைப் பதிவு, அரியர் வைத்திருக்கிறாரா, வகுப்பறையில் அவரின் படிப்பு எப்படி இருக்கிறது என்பதன் அடிப்படையிலும் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவது பற்றிய முடிவை நிர்வாகம் எடுக்கும். அதிலும் குறிப்பாக வருகைப்பதிவு இல்லாதவர்களை தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படமாட்டார்கள். அந்தவகையில் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 26 பேரில், பெரும்பாலானோர் பல நாட்களாக கல்லூரிக்கு வராதவர்கள் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கையை கல்லூரி நிர்வாகம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.