செம்பனார்கோயில், ஆக.12: செம்பனார்கோயில் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறுவை நெல் சாகுபடி செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்ட வயலை விவசாயிகள் பராமரித்து வந்தனர். தற்போது செம்பனார்கோயில் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்கதிர்கள் முளைத்து அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இதுகுறித்து குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில், குறுவை சாகுபடி என்பது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் நடவு செய்து 110 முதல்125 நாட்களுக்குள் அறுவடை செய்வார்கள். அந்த வகையில் ஏப்ரல் மாத இறுதியில் குறுவை பணியை மேற்கொண்டோம். மழைக்கு முன்பு குறுவை அறுவடையை முடித்துவிட்டு சம்பா பணியை தொடங்க வேண்டும்.
தற்போது நெற்பயிர்களில் கதிர்கள் முளைத்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் குறுவை நெல்லை அறுவடை செய்வோம். குறுவை நெல்லை அரசு உரிய விலைக்கு கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்த்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.