ஈரோடு, நவ. 21: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் 3வது பிளாட்பார்மில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த போலீஸ் ஸ்டேஷனில் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், நடப்பாண்டு பதிவான குற்ற வழக்குகள், அவற்றின் தன்மை, ரயிலில் அடிபட்டு இறந்து அடையாளம் தெரியாமல் உள்ள சடலங்களை அடையாளம் காண்பதற்கான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, போலீசாருக்கு அரசு வழங்கிய சீருடை உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் எஸ்ஐ.க்கள், எஸ்எஸ்ஐ.க்கள் உட்பட போலீசார் உடனிருந்தனர்.