அரூர், ஜூன் 26: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர், தாசிரஅள்ளி வழியாக சிந்தல்பாடி செல்லும் ரயில்வே தரைப்பால தூண்கள் 1857ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த பாதை வழியாக சிந்தல்பாடி, ராமியம்பட்டி, தென்கரைகோட்டை, தொங்கனூர், வகுத்தப்பட்டி, கடத்தூர், அரூர் உள்பட பல ஊர்களுக்கு பாலத்தின் அடியில் உள்ள பாதையை பேருந்துகள், இருசக்கர வாகனம், மினிடோர், நடந்து செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிறிதளவு மழை பெய்தாலும் ஆவலம்பட்டியில் ரயில்வே பாலத்தின் அடியில் குளம் போல் தண்ணீர் தேங்குவதால் அந்த வழியாக செல்லும் பெண்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிப்பட நேரிடுகிறது.
தொடர்ந்து தண்ணீர் தேங்கி அதன் வழியாகவே வாகனங்கள் சென்று வந்ததில், கற்கள் பெயர்ந்து டூவீலரில் செல்பவர்கள் ஏராளமானோர் கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வந்தது. எனவே இதனை சீரமைக்க வேண்டும் என, பல்வேறு வழிகளில் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து ரயில்வேதுறை சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பாலத்தின் தூண்கள் சீரமைக்கப்படுவதுடன், கீழே மழை நீர் தேங்காத வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது.