கோவை, ஆக. 27: ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து, கோவை கூட்ஷெட் ரோட்டில் உள்ள ரயில்வே பணிமனையில் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதுகுறித்து எஸ்ஆர்எம்யூ சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் கூறியதாவது: கடந்த 1-1-2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேரும் ரயில்வே தொழிலாளர்களுக்கு புதிய பென்சன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதை ரத்து செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. கடந்த மே மாதம் உண்ணாவிரத போராட்டம் திட்டமிடப்பட்டது. அரசு கேட்டு கொண்டதின் பேரில், அது ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 24ம் தேதி பிரதமர் மோடி தலைமையில், நடந்த கூட்டத்தில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம், 25 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெறுபவர்களுக்கு கடைசி 12 மாத சம்பளத்தில் அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். உடன் கோட்ட செயலாளர் ஜோன் செபஸ்டியன், துணை பொதுச்செயலாளர் மகேஷ் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.