உடுமலை, அக்.18: உடுமலையில் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. உடுமலை- பழனி சாலையில், ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதையின் வழியே பி.ஏ.நகர், ஜீவாநகர், விஜயகிரி நகர், ஸ்ரீராம் லேஅவுட், கண்ணமநாயக்கனூர் ஆகிய இடங்களுக்கு தினசரி ஏராளமானோர் சென்று வருகின்றனர். குடியிருப்புகள் இங்கு அதிகளவில் உள்ளன. இந்நிலையில், மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கிவிடுகிறது.
இதனால் சுரங்கபாதையை கடந்து பொதுமக்கள் கிராமங்களுக்கு செல்ல முடியவில்லை. பல கிமீ தூரம் சுற்றிச்சென்று அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில், அவ்வப்போது மோட்டார் மூலம் உறிஞ்சி மழைநீர் வெளியேற்றப்படும். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர், சாக்கடை கால்வாயில் செல்லும் வகையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இனி மழைநீர் தேங்காது என்பதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.