தக்கலை, மே. 14: தக்கலை அருகே உள்ள தென்கரை தோப்பை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் விஷ்ணு. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இரணியல் அருகே உள்ள சடையன்விளையை சேர்ந்தவர் ஷாஜி. இவர் தக்கலையில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி சுகன்யா, கவிதாவுக்கு அறிமுகமானார். அப்போது கவிதாவின் கணவருக்கு தனது கணவர் மூலம் ரயில்வே மற்றும் கப்பல் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் 2019 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
வேலை தொடர்பாக போலியான பணி உத்தரவும் அடையாள அட்டையும் வழங்கி உள்ளார். மேலும் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் சென்று வேலை பார்க்குமாறு கூறியுள்ளார், இந்த உத்தரவை திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் சென்று கேட்கும் போது இது போலியான உத்தரவு எனவும், இப்படி பணிகள் இங்கே நியமனம் செய்யப்பட வில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து ஷாஜியிடம் கேட்டபோது சென்னை மற்றும் ஆந்திராவில் சென்று வேலை பார்க்குமாறு கூறி அவர்களை ஏமாற்றி உள்ளார். ஏமாற்றப்பட்டதை அறிந்த கவிதா, சாஜி மற்றும் சுகன்யா மீது தக்கலை போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷாஜியை கைது செய்தனர்.