வேலூர், ஆக.24: காட்பாடி அடுத்த முகுந்தராயபுரம் ரயில் நிலையம் அருகே ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைத்த ராணிப்பேட்டை வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலையில் சென்னை – பெங்களூர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 17ம் தேதி மாலை திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனை பார்த்த ரயில் நிலைய மேலாளர், சிக்னல் துண்டிப்புக்கான காரணம் குறித்து தண்டவாளம் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது தண்டவாளத்தில் 9 அடி நீளமுள்ள இரும்பு ராடு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதேபோல், அதன் அருகே பெங்களூர் -சென்னை செல்லும் தண்டவாளத்தில் பெயின்ட் டப்பா மற்றும் கல் ஒன்றும் மர்ம நபர்கள் வைத்து சென்றிருந்தனர். இதன் காரணமாக சிக்னல் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் இருந்து மோப்பநாய் சார்லஸ் வரவைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சரியான நேரத்தில் தண்டவாளத்தில் இருந்த கம்பி, கல் ஆகியவற்றை கண்டுபிடித்து அகற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்வவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்ய சேலம் ரயில்வே டிஎஸ்பி பெரியசாமி தலைமையில் காட்பாடி ரயில்வே இன்பெக்டர் ருவாந்திகா உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இதில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த நவீன்குமார்(21) என்பவர் தண்டவாளத்தில் இரும்பு ராடு, கல் வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், ‘கைதான நவீன்குமார் ரயில் கவிழ்கிறதா? என்பதை சோதிக்க முதலில் தண்டவாளத்தில் கல் வைத்தாராம். அப்போது அந்த வழியாக ரயில் சென்றபோது கல் நசுங்கிவிட்டது. இதனால் அடுத்தகட்டமாக ரயில் கவிழ்கிறதா என பார்க்க இரும்பு ராடு வைத்தாராம். இதற்கிடையில் சிக்னல் துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்ததில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது’ என்றனர். ரயில்களுக்கும், பயணம் செய்யும் பயணிகளின் உயிருக்கு கேடு விளைவிக்கும் குற்ற செயிலில் ஈடுபட்ட நபரை ஒரு வார காலத்திற்குள் கைது செய்த தனிப்படையினரை ரயில்வே ஏடிஜிபி வனிதா, எஸ்பி ஈஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.