சேலம், செப். 21:சேலம் வழியே கேரளா சென்ற ரயிலில் 4கிலோ கஞ்சா கடத்தி வந்த 2கேரளா வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதை தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், சேலம் ரயில்வே போலீஸ் தனிப்படை போலீசார், நேற்று தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜோலார்ப்பேட்டை ரயில்நிலையத்தில் இருந்து ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், பின்பக்க பொதுப்பெட்டியில், இருக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்த பேக்கை எடுத்து பார்த்த போது 4கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இந்த கஞ்சாவை கடத்திய வந்தவர்கள் யார் என போலீசார் விசாரித்தனர். அப்போது, அந்த பெட்டியில் சந்தேகம்படும் படி இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த யோகியா(28), சுகில்தேவ்(30)என்பதும், இவர்கள் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கேரளாவுக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது. அவர்களிடம் ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் விசாரணை நடத்தினார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, இக்கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.