கோவை, ஜூலை 6: சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்களில் பயணச்சீட்டு பெறாமல், ஓசி பயணம் செய்பவர்களை கண்காணித்து பிடிப்பதில், ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். அதன்படி, நடப்பாண்டில், கடந்த ஏப்ரல் 1ம்தேதி முதல், ஜூன் 30ம் தேதி வரை நடத்தப்பட்ட ரெய்டில், பயணச்சீட்டு பெறாமல் 43,524 பேர் ஓசி பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து ரூ.3 கோடியே 79 லட்சத்து 87 ஆயிரத்து 53 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 40,563 பேரிடமிருந்து ரூ.2 கோடியே 37 லட்சத்து 88 ஆயிரத்து 917 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து, கட்டணம் செலுத்தாமல் சுமைகளை ரயிலில் கொண்டுசென்றதாக 208 பேரிடமிருந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 833 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், 3 மாதத்தில் 84 ஆயிரத்து 295 பயணிகளிடம் இருந்து ரூ.6 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 803 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை, கோவை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.