Thursday, September 12, 2024
Home » ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க…

ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க…

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் தேவை அதிக கவனம்உயர் ரத்த அழுத்தம் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. உணவுமுறை மாற்றங்கள், இன்றைய அவசர வாழ்க்கை முறை, சக மனிதர்களின் செயல்பாடு, பொருளாதார சிக்கல்கள் போன்றவை மிகப் பெரும் அளவில் உயர் ரத்த அழுத்த விகிதத்தை அதிகரித்திருக்கிறது.ரத்த அழுத்தம் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது என்பதால் அதனை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். இதய சிகிச்சை மருத்துவர் பரத்குமார் உயர் ரத்த அழுத்தம் நம்மை அண்டாமல் இருக்கும் வழிகளை இங்கே விவரிக்கிறார்.உயர் ரத்த அழுத்தத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. உயர் ரத்த அழுத்தத்தோடு எப்போதும் பரபரப்பான வாழ்க்கை முறையில் பலவித டென்ஷன்களையும் சுமந்து திரிவதால் பக்கவாதம் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது. உலகளவில் இறப்பு விகிதம், ஊன விகிதம் அதிகரிக்கவும் உயர் ரத்த அழுத்தம் முக்கியக் காரணங்களில் ஒன்றாக உள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.உலகளவில் ஆண்டுக்கு 10 மில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் இறப்பைச் சந்திக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் உயர் ரத்த அழுத்தத்தின் அதிக சுமை அளவுக்கு மீறி உயர்ந்து வருகிறது. குறிப்பாக தெற்காசியா மற்றும் சஹாரா சார்ந்த நாடுகளில் உயர் ரத்த அழுத்த சுமை அதிகரிப்புக்கு காரணம் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் சராசரி ரத்த அழுத்தம் என்றும் சொல்லப்படுகிறது.உயர் ரத்த அழுத்தத்தை முன் கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பு முறைகள், நவீன சிகிச்சைகள் என நோய் தீர்க்கும் முறைகளும் மேம்படுத்தப்பட்டே வருகிறது. ஆனாலும் உயர் ரத்த அழுத்தம் உலகளவிலான பொது சுகாதார சவாலாக மாறியுள்ளது. உயர் ரத்த அழுத்தம் முரண்பாடுகளைக் கொண்ட ஒரு நோயாகும். ஆனாலும் இதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஆனால், நோய் கண்டறியும் விகிதங்கள் மோசமானவையாக உள்ளன. சிகிச்சை அளிப்பதும் எளிது. ஆனால், சிகிச்சை விகிதங்கள் ஏமாற்றமளிப்பவையாக உள்ளன. பல திறன் வாய்ந்த மருந்துகள் உள்ளன.ஆனால், கட்டுப்பாடு விகிதங்கள் படு மோசமானவையாக உள்ளன. உயர் ரத்த அழுத்த சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு விகிதங்கள், மக்கள் தொகை அளவில் குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருவாயுள்ள நாடுகளில் மிக மோசமானவையாகவே உள்ளன. மக்கள் தொகையின் சராசரி ரத்த அழுத்தத்தைக் குறைப்பது என்பது, உயர் ரத்த அழுத்தச் சுமையை சீர் செய்வதில் பயனுள்ள ஒரு உக்தியாகும்.உயர் ரத்த அழுத்த பிரிவில் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மருந்து எடுத்துக் கொள்வது பயனுடையதாக இருந்த போதும் மக்கள் தொகையில் அதன் தாக்கம் என்பது, அதாவது ரத்த அழுத்தம் குறைவது என்பது மிகக் குறைந்தளவே ஆகும். ஆரம்பகாலம் மற்றும் முதன்மைத் தடுப்பு என்பது சராசரி ரத்த அழுத்தத்தில் மக்கள் தொகை அளவிலான குறைப்புக்கு முக்கியமான உக்தியாகும்.உதாரணமாக வளர்ந்த நாடுகளில் இதயநோய் மற்றும் பக்கவாத பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு அளவு குறைந்துஇருப்பதற்கு, புகையிலை பயன்படுத்துதல், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு போன்ற மக்கள் தொகை அளவு ஆபத்துக் காரணிகளில் ஏற்பட்டிருக்கும் மேம்பாடுகளும் காரணம் ஆகும்.இந்தியாவில் உயர் ரத்த அழுத்தத்தை ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் கிடைப்பது அரிது. இந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களான டெல்லி, சென்னை ஆகியவற்றில் நடத்தப்பட்ட ஒரு நீளமான தொடர் ஆய்வில் சராசரி BP 2.6 mm Hg அதிகரித்துக் காணப்பட்டது.மேலும் ஆறு நபர்களில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதும் கண்டறியப்பட்டது. உயர் ரத்த அழுத்தம் நிலவுவதன் மீது சராசரி ரத்த அழுத்தத்தில் 2.6 mm Hg அதிகரிப்பின் எதிர்பார்க்கப்படும் தாக்கத்தின் அளவு அதிகம் என்பதால் இது 10 ஆண்டுகளில் நடப்பு நிலவர விகிதமான 30 சதவீதத்தை இரட்டிப்பாக்க வாய்ப்புள்ளது.உயர் ரத்த அழுத்தத்தால் மிகவும் சுலபமாக பாதிக்கப்படக்கூடிய பிரிவு எதுவென்றால் அது மிகவும் நலிந்த, குறைந்த படிப்புடைய மற்றும் மிகவும் தாழ்ந்த சமூகப் பொருளாதார நிலைகளிலிருந்து வரக் கூடியவர்களாவார்கள். சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் குறையும் பொழுது மக்கள் தொகையளவில் நோய்த்தாக்கத்தை அதிகரிக்கச் செய்யும். உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியற்ற தன்மையால் மேலே குறிப்பிட்ட பிரிவினர் சிகிச்சையை அலட்சியப்படுத்தும் போக்கும் காணப்படுகிறது.இது ரத்த அழுத்தப் பிரச்னைக்கான பாதிப்புக்களை அதிகரிக்கவே செய்யும். கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தத்தால் தீவிரமான இதய ரத்தநாள நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பு ஏற்படும் போது வீட்டுப் பொருளாதாரத்தை இது கணிசமாக பாதிக்கிறது. வேலைக்குச் சென்று சம்பாதிக்கிற திறன் மிகுந்த வாழ்நாள் காலத்தை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பறித்துக் கொள்கிறது. அத்துடன் சிகிச்சைக்காக ஆகும் செலவுகளாலும் இவர்கள் நொடிந்து போகின்றனர்.ஆரம்ப நிலையிலேயே உயர் ரத்த அழுத்தத்தை தடுப்பது என்பது உயர் ரத்த அழுத்தத்தையும் மற்றும் அதன் சிக்கல்களையும் சமாளிப்பதற்கு ஆகும் தொடர் செலவு மிக்க சுழற்சியைத் தடுப்பதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இந்த நிலையை அடைவதற்கு உயர் ரத்த அழுத்தத்தை துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதோடு ஆரம்ப தடுப்பு உக்திகளை நடைமுறைப்படுத்துவதிலும் முயற்சிக்க வேண்டும்.ஆரம்ப நிலையில் தடுப்பது என்பது மோசமான உடல் நிலைக்கு காரணமானவற்றை நீக்குவதன் மூலம் நல்ல உடல் நலத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக பெருகிவரும் சம்பவத்தைக் குறைப்பது என்பதே ஆரம்ப நிலைத்தடுப்பு முயற்சிக்கான நோக்கம் ஆகும்.உயர் ரத்த அழுத்ததில் முதன்மைத் தடுப்பு செயல்பாட்டுக்கு இரண்டு முக்கிய அணுகுமுறைகள் உள்ளன. முதலாவது மக்கள் தொகை அடிப்படையிலான அணுகுமுறை. மக்களின் சராசரி ரத்த அழுத்தத்தை குறைப்பதே இதன் குறிக்கோளாகும். சராசரி ரத்த அழுத்தத்தில் ஒரு சிறிய வகைப்பாடுகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எதிர்மறை நிகழ்வுக்கான சாத்தியங்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறது.இரண்டாவது அணுகுமுறையானது, உயர் ரத்த அழுத்த பாதிப்பு சாத்தியமுள்ள உயர் இடர் கொண்ட தனிநபர்கள் மத்தியில் ஒரு இலக்குடன் கூடிய அணுகு முறையாகும். சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் கீழ்த்தட்டிலுள்ள பிரிவைச் சேர்ந்த நபர்கள், தற்பொழுது மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள் மற்றும் மிதமான சற்றே உயர்ந்திருக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு பாதிப்புள்ள நபர்கள் ஆகியோரிடையே வயது வந்த மக்களிடையே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியத்திறன் மற்றும் காரணிகள் இருக்கிற நிலையில் உயர் ரத்த அழுத்தம் வராமல்; தடுப்பதற்கு முன் இத்தகைய அணுகுமுறை பெரியளவில் பலன் தரும்.குறைந்தளவு இடர் உள்ள இளம் வயதுவந்த நபர்களை விட அதிக இடருள்ள வயதில் மூத்த நபர்கள், வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த நோயின் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளலாம். இவற்றை எல்லாம் விட முன் தடுப்பு நடவடிக்கைகளே இந்த விஷயத்தில் அதிக பலன் தரக்கூடியது.உயர் ரத்த அழுத்த முன் தடுப்புக்காக கடைப்பிடிக்க வேண்டியவை* உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்தல்உப்பின் அளவைக் குறைப்பது முதன்மையான ஒன்று. தினமும் சராசரியாக 1.7 கிராம் என்ற அளவில் உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைப்பது ரத்த அழுத்தத்தில் 2 mm Hg குறைக்க வழி வகுக்கும். தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் அளவாக 6 கிராம் உப்புக்கும் மிகைப்படாத அளவே பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்தளவு உப்பு எடுத்துக் கொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் இடரைக் குறைக்கிறது. குறிப்பாக அதிக உடல் பருமன் உள்ள நபர்கள் கண்டிப்பாக உப்பின் அளவைக் குறைத்தே உட்கொள்ள வேண்டும்.* உடல் எடைக்குறைப்புஉடல் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தத்துக்கான அதிகரித்த இடருடன் தொடர்புடையதாக இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 4.4. கிராம் என்ற அளவுக்கு அல்லது அதற்கும் அதிகமாக தொடர்ந்து நிலையாக உடல் எடையைக் குறைத்திருப்பது 5.0-7.0 mm Hg ரத்த அழுத்தத்தைக் குறைக்க வாய்ப்பாகும்.* மதுபானம் அருந்துவது…அதிகளவு மது அருந்துவதற்கும், அதிகரித்திருக்கும் ரத்த அழுத்தத்துக்கும் இடையிலான தொடர்பும் உறவும் பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மருந்து உட்கொள்வதன் அடிப்படையில் ரத்த அழுத்த குறைப்பும் மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளும் அளவைக் குறைப்பதும், வழக்கமான அடிப்படையில் மது அருந்துகிற நபர்களிடம் காணப்படுகிறது. தொடர்ச்சியாக அதிகளவு மதுபானம் அருந்துவது இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்குகிறது. இந்தியர்களிடம் மிகச் சாதாரணமாக மதுப்பழக்கம் காணப்படுகிறது. இது அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.* உழைப்பு… உடற்பயிற்சி…உடல் சார்ந்த செயல்பாடுகளின் அளவுக்கும் ரத்த அழுத்தத்துக்கும் இடையில் எதிர்மறையான உறவுள்ளதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு, ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு ஏரோபிக் அடிப்படையிலான உடற்பயிற்சி செய்வது, ரத்த அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கான முதன்மைத் தடுப்பு முயற்சியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் எழுந்து சென்று சற்று தூரம் நடப்பது போன்ற சில எளிமையான நடவடிக்கைகள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பலனளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.* உணவுப்பழக்கத்தில் மாற்றம்பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள மற்றும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுப் பொருட்கள், குறைவான கொழுப்புள்ள பால்பொருட்கள் செரிவாக உள்ள உணவுப் பொருட்கள், நிறைவுற்ற மற்றும் முழுமையான கொழுப்பு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வது, உயர் ரத்த அழுத்தம் உள்ள மற்றும் இயல்புநிலை கொண்ட நபர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் திறன் கொண்டவையாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.விரிவான வாழ்க்கை முறை திருத்த நடவடிக்கைகள் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பயனளிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுப்பதற்கான முன் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நேர்மறையான வாழ்க்கை முறை மாற்றங்களும் இந்தியாவின் தேசிய முன்னுரிமை அளிக்க வேண்டிய மக்களின் தேவையாக உள்ளது.– கே.கீதா

You may also like

Leave a Comment

20 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi