Saturday, March 15, 2025
Home » ரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம்?

ரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம்?

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றியது, தானம் அளித்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டது, அதே நேரத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மீதான பகீர் குற்றச்சாட்டு என்று புத்தாண்டின் தொடக்கத்திலேயே மருத்துவ உலகம் அனலில் தகித்தது. ‘ரத்தப்பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம்’ என்று சமூக ஆர்வலரும், பொது மருத்துவருமான புகழேந்தியிடம் பேசினோம்…‘‘முதலில் தமிழ்நாட்டின் ரத்த வங்கி களின் தரமே கேள்விக்குறியாக இருக்கிறது. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை அளிப்போர்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (National Accreditation Board for Hospitals Health care providers NABH) தரச்சான்றிதழ் பெற்ற ரத்த வங்கிகள் தமிழ்நாட்டில் ஐந்துதான் இருக்கின்றன. அவை அனைத்துமே தனியார் மருத்துவமனை ரத்த வங்கிகள். ஒன்றுகூட அரசு மருத்துவமனை ரத்த வங்கி கிடையாது. அதிலும் இந்த 5 ரத்த வங்கிகளும் சென்னையில் மட்டும் இருக்கின்றன. மற்ற மாவட்டங்களில் தரச்சான்று பெற்ற ரத்த வங்கிகள் இல்லை. அடுத்ததாக, ரத்த வங்கிகளில் அடிப்படையான விஷயம் பின்பற்றப்படுகிறதா என்பதும் நாம் எதிர்கொள்ளும் சந்தேகம். ரத்தத்தில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா கிருமிகளை கண்டறிய மிகவும் நுண்ணிய சோதனையான Nucleic Acid Amplification(NAA)தான் செய்ய வேண்டும் என்பதும், ஏற்கெனவே 2015-ல் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், 3rd Generation Elisa Kit சோதனையைவிட, 4th Generation Elisa Kit சோதனையே சிறந்ததாகவும் உலக சுகாதார மையத்தால் பரிந்துரைக்கப்பட்டது. அதையே இங்கிலாந்து, அமெரிக்கா என பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டும் வருகிறது. ஆனால், நம் நாட்டில் 3rd Generation Elisa Kit சோதனையே மேற்கொள்ளப்படுகிறது. எந்த சோதனை செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் Central Drugs Standard Control Organization-டம் உள்ளது. நான்காவது தலைமுறை சோதனைக் கருவியானது, ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகளையும் (வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் வெளிப் பொருட்கள்), ஆன்டிஜென்கள்(உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன், குறிப்பாக ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யும் நச்சுக்கள் மற்றும் பிற வெளிப்பொருட்கள்) என இரண்டையும் கண்டறியக் கூடியது. எச்.ஐ.வி துகளின் மேற்பரப்பில் P24 எனப்படும் புரதங்கள் ஆன்டிஜென்களாக உள்ளன. ஆன்டிபாடிகள் மற்றும் ஆன்டிஜென்கள் இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பவை. மூன்றாவது தலைமுறை சோதனைக் கருவியானது, வெறுமனே ஆன்டிபாடிகளை மட்டும் சோதனை செய்யக்கூடியது. இதில், Window period அதிகம். (விண்டோ பீரியட் என்றால் உடலில் எச்.ஐ.வி பாதிப்பு ஒருவருக்கு இருக்கும். மற்றவருக்கு தொற்றக்கூடிய வாய்ப்பும் இருக்கும். ஆனால், ரத்தப் பரிசோதனையில் எச்.ஐ.வி இருப்பது தெரிய வராது. இதில், எச்.ஐ.வி பாசிடிவ் ரிசல்ட் தெரிவதற்கு, Window Period என்று சொல்லக்கூடிய காலமானது 3 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை தேவைப்படும்.) அப்படியிருக்கும்போது, ஒருவருக்கு எச்.ஐ.வி நெகடிவ்வாக இருந்தால் பிரச்னை இல்லை. அதுவே பாசிடிவ் என்றால் அதற்குள் எச்.ஐ.வி கிருமிகள் பெருகிவிடும்.4-வது தலைமுறை சோதனைகளோ துல்லியமாக ஒரு வாரத்தில் வெளிப்படுத்தி விடும். ஏனெனில், p24 ஆன்டிஜென் அளவிற்கு அதிகமாக இருக்கும்போது இது அளவிடுகிறது. இதனால், சராசரியாக 7 நாட்களாக Window period குறைகிறது. தரமற்ற ரத்தம் ஏற்றியதால் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட நோயாளியை தமிழ்நாட்டில் வேலூர் CMC மருத்துவ மனையில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் 8 சதவீதம் ஜி.டி.பி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கினால்தான் சுகாதாரம் மேம்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 0.8 சதவீதம்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் விதிமுறை கள் மீறப்படுகின்றன. ‘ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 4 லட்சம் நன்கொடையாளர்களிடம் ரத்த தானம் பெறப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டிலும் குறைந்தது 10% தன்னார்வ ரத்த நன்கொடையாளர்களுக்காவது எச்.ஐ.வி பாசிட்டிவாக இருக்கும். இந்த விவரத்தை அவர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. அடுத்து தானம் பெறப்பட்ட ரத்தத்தை பயனாளிகளுக்கு ஏற்றப்படுவதன் மூலம் எச்.ஐ.வி பரவிய நோயாளிகளில் 50 சதவீதம்பேருக்குகூட அந்த விவரத்தையும் தெரிவிப்பதில்லை. அப்படியே தெரியப்படுத்தினாலும், அதை உடனே தெரிவிப்பதும் இல்லை. உடனே தெரிவிக்கப்பட்டால், சிகிச்சையை முன்னதாக ஆரம்பிக்க முடியும்’ என, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (TANSACS) அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மற்றொரு புறம், மும்பையைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளரான சேத்தன் கோத்தாரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தியாவில், அக்டோபர் 2014-ல் இருந்து, மார்ச் 2016 வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் குழந்தைகள் உட்பட மொத்தம் 2,234 பேர் பாதுகாப்பற்ற ரத்தம் ஏற்றப்பட்டதன் மூலம் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு தெரிவித்துள்ளார். ;கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், சென்ற மாதம் 30-ம் தேதி மாங்காட்டைச் சேர்ந்த லதா என்ற பெண் தனக்கு எச்.ஐ.வி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டதாக காவல்துறையில் வழக்கு பதிந்துள்ள செய்தியும் வந்துள்ளது. இதைப் பற்றி செய்தியாளர்கள் அந்த மருத்துவமனையின் முதல்வரான வனிதா மணியிடம் பேசியபோது, தங்கள் மருத்துவமனையில் நான்காம் தலைமுறை சோதனைக் கருவி மூலம்தான் ரத்தத்தின் தரம் பரிசோதிக்கப்படுவதாக கூறியிருக்கிறார். இதற்கடுத்து, அறுவை சிகிச்சையின்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் டீன் தன்னுடைய வயிற்றில் காட்டன் உருண்டையை வைத்துவிட்டதாக வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அஜிதா என்னும் மற்றொரு பெண் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் வசந்தா மணியோ இவற்றையெல்லாம் மறுத்து வருகிறார். ;தமிழ்நாட்டில் சமீபகாலங்களில் பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. எங்களிடமே நிறையபேர் வந்து சொல்கின்றனர் என்று ‘தமிழ்நாடு பாசிட்டிவ் உமன் நெட்வொர்க் அமைப்பின்’ (எச்.ஐ.வி நோயாளிகள் தொடர்பு கொள்வதற்காக அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் ஓர் அமைப்பு) தலைவரான கௌசல்யா, ‘கடந்த 2017-ல் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீக்காயத்திற்காக சிகிச்சை பெறச் சென்ற 11 வயது சிறுமி ஒருவருக்கு தரமற்ற ரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கிறது.வேறொரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சென்றபோது, இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையை அணுகியபோது, அதன் ஊழியர்கள் ‘நாங்கள் தரமான ரத்தம்தான் ஏற்றினோம், உங்களில் யாருக்கேனும் எச்.ஐ.வி இருந்திருக்கலாம், அதை மறைத்துள்ளீர்கள்’ என்று கூறி அனுப்பிவிட்டனர். விடாமல் அந்த பெற்றோர்கள் வேறொரு மருத்துவமனையில் தங்கள் ரத்தத்தை பரிசோதனை செய்ததில், அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்த விவரத்தை மீண்டும் இவர்களிடம் தெரியப்படுத்தியதில், அந்த ஊழியர்கள் ‘உங்கள் குழந்தையை யாராவது பலாத்காரம் செய்திருப்பார்கள்’ என்று சொல்லியுள்ளனர். இதுதான் முக்கிய பிரச்னை. தாங்கள் செய்த தவறை மருத்துவமனைகள் ஒப்புக் கொள்வதில்லை. மற்ற மாநிலங்களில் எல்லாம் ரத்தம் மூலம் எய்ட்ஸ் பரவிய சம்பவங்களுக்குப்பிறகு, தங்கள் தவறை ஒப்புக்கொண்டு, நான்காம் தலைமுறை கருவி சோதனையை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று 2 வருடங்களுக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. ரத்த நன்கொடையாளர்களுக்கு ரத்ததானம் பெறுவதற்கு முன்னான ஆலோசனையும் வழங்குவதில்லை, அதற்குப்பின் எச்.ஐ.வி பாசிடிவ் இருந்தாலும் அதை தெரிவித்து விழிப்புணர்வும் ஏற்படுத்துவதில்லை. சாத்தூர் பெண் விஷயத்தில் ரத்தம் கொடுத்தவர் நியாயமாக நடந்துகொண்டதால், இந்த பிரச்னை வெளிவந்துள்ளது. இல்லையென்றால், இதுவும் வெளி வந்திருக்காது. கொடையாளர் 2016-லேயே ரத்தம் கொடுத்திருக்கிறார். இன்றுவரை அவருக்கு தெரிவிக்கவில்லை.அடுத்து, ரத்த தானம் பெறப்பட்ட ரத்தம் தர சோதனைக்குப்பின் பாதுகாப்பானது என்ற லேபிள் ஒட்டப்பட வேண்டும். அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளில், சோதிக்காமலே பாதுகாப்பானது என்று ஒட்டிவிடுவது அல்லது கவனக்குறைவாக லேபிள் ஒட்டுவது என நடக்கிறது. சாத்தூர் கர்ப்பிணிப்பெண் விஷயத்தில் இந்த தவறு நடந்திருக்கிறது. அதை மறுத்து வாதம் செய்கிறார்கள். ரத்தம் தானம் செய்தவர்கள் ஏன் Window Period-ல் இருந்திருக்கக் கூடாது என்பதே என்னுடைய சந்தேகம்.தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் திட்ட இயக்குனரான செந்தில்ராஜ் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இது மிகவும் துரதிர்ஷ்டமானது, எந்த சந்தேகமும் இல்லை; இந்த சிஸ்டத்தில் இருக்கும் இதுபோன்ற அனைத்து ஓட்டைகளையும் அடைக்க முயற்சி செய்கிறோம். எச்.ஐ.வி வைரஸ் கண்டறிய முடியாதபோது, அதிநவீன ID NAT சோதனைக்கருவியை பயன்படுத்துவதால் Window Period-ஐ குறைக்க முடியும். ரத்தம் மாற்றுவதற்கு முன்னர் செவிலியர் மூலம் செய்யக்கூடிய எளிமையான Card Test (கர்ப்ப பரி சோதனையைற‘:””ப் போன்ற செயல்பாடு) மூலம் எச்.ஐ.விக்கு பரிசோதிப்பதற்கான ஒரு முன் மொழிவையும் செயல்படுத்தும் எண்ணம் உள்ளது’ என்று நடைமுறையில் இருக்கும் தவறுகளை ஒப்புக் கொண்டுள்ளார். கீழ்ப்பாக்க மருத்துவமனை முதல்வர் வசந்தா மணியோ, தாங்கள் ஏற்கனவே நான்காம் தலைமுறை சோதனைக் கருவியை உபயோகிப்பதாகவும், தாங்கள் செலுத்திய ரத்தம் தரமானது என்றும் சொல்வது, செந்தில்ராஜ் சொன்ன தகவலுக்கு முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது. அரசாங்கம்தான் இதை தெளிவுபடுத்த வேண்டும். எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசாங்கம் தரமான சிகிச்சை அளிப்பது சாத்தியமா?சாத்தூர் பெண்ணின் விஷயத்தில், மருத்துவர்கள் தாமதமாக விருதுநகருக்கு அனுப்பிவிட்டனர். பாதிக்கப்பட்டவர் கர்ப்பிணிப் பெண்ணாக இருக்கும்பட்சத்தில், குழந்தைக்கும் பரவுமா? என்ற கேள்வி எழுகிறது. அம்மாவின் ரத்தத்தில் எச்.ஐ.வி வைரஸ் அடர்த்தி(Viral load) அதிகமாக இருந்தால், கருவிலுள்ள குழந்தைக்கும் பரவும். அதுமட்டுமில்லாமல், முதல் மூன்று மாத காலங்களில் நஞ்சுக்கொடியில் எந்தவிதமான ஒழுகலும் இருக்காது. அதுவே 8, 9-வது மாதங்களில் கர்ப்பகாலம் நெருங்குவதால் நஞ்சுக்கொடி ஒழுகல் மூலமாக குழந்தைக்கு பரவும் வாய்ப்பு அதிகமாகிறது. இந்தப் பெண்ணுக்கு அடுத்த மாதம் பிரசவ காலமாக இருப்பதால், நிலைமை கொஞ்சம் சிக்கலானதுதான். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது.எனவே, மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள அரசாக இருந்தால், ‘தரக்கட்டுப்பாட்டை கடுமைப்படுத்துவது; 4-ம் தலைமுறை சோதனைக்கருவியை பயன்படுத்த ரத்த வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்தல்; கைகளால் எழுதப்படும் ஒரு நோயாளியின் கேஸ் ஸ்டடியை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்பதால் எலக்ட்ரானிக் கேஸ் ஸ்டடியை நடைமுறைக்கு கொண்டு வருவது’ என இந்த 3 விஷயங்களில் கவனம் செலுத்தினால் அப்பாவி மக்களின் உயிர்களை ஓரளவிற்கு காப்பாற்ற முடியும்!’’

You may also like

Leave a Comment

20 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi