ரத சப்தமி 1 – 2 – 2020உலகத்துக்கே ஒளி வழங்கும் சூரியனை, சிவ அம்சமாகக் கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாய் கொண்டு சூரிய நாராயணன் என்றும் சொல்வார்கள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக சிவாகமங்கள் கூறுகின்றன. சூரிய சக்தியால்தான் பயிர்கள் வளர்கின்றன. ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன. கோடை, மழை, குளிர் உள்ளிட்ட பருவநிலைகள் சூரியனாலேயே அமைகின்றன. சூரியனை கடவுளாகக் கொண்டாடும் வழிபாடு ‘சவுரம்’ எனப்படுகிறது. சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார்.மேலும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலாவரும் உயர்வையும் அடைந்தார். இதனால் இருளை அழிக்கவும், ஒளியை உண்டாக்கவும், வெப்பம் தரும் வல்லமையையும் பெற்றார். காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதிதிக்கும் விசுவான் முதலான 12 சூரியர்கள் பிறந்தனர். அதிதி அன்னையின் புத்திரர்களானதால், பன்னிரு சூரியர்களையும் ‘பன்னிரு ஆதித்யர்’ என்பார்கள். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் அந்த நாள் மாதப்பிறப்பாகக் கருதப்படுகிறது.சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக சித்திரை மாதப்பிறப்பை சித்திரை விஷு என்றும், ஐப்பசி மாதப்பிறப்பை ஐப்பசி விஷு என்றும் கூறுவர். சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதால் பன்னிரு சூரியர்களாக கொள்ளப்படுகிறார். சூரியன் ஏறிவரும் தேர் ஒற்றைச் சக்கரம் கொண்டது. அந்த தேரை பச்சை வண்ணமுடைய ஏழு குதிரைகள் இழுக்கின்றன. இந்த ஏழு குதிரை ரதத்தின் சாரதி, அருணன். இவர் காலில்லாதவர். சூரியனின் ரதம் பொன்மயமானது. அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும், மூன்று நாபிகளும் உண்டு.மூன்று நாபிகளும் மூன்று காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்தில் உள்ள ஆறு கட்டைகளும் ஆறு ருதுக்களையும், சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தையும் குறிக்கின்றன. சூரியன் நான்கு பட்டணங்களையும் சுற்றிவந்து உதயம், மத்தியானம், அஸ்தமனம், அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார். சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி. அவரது அவதார தினத்தையே ரத சப்தமியாக கொண்டாடுகின்றனர். சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மறுபெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால்தான் தை அமாவாசை கழிந்த 7ம் நாளை ‘சப்தமி திதி’ என்கிறோம்.ரத சப்தமியன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என புராணங்கள் கூறுகின்றன. அன்று சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும், ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. அன்றைய தினம் சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடுவது சிறப்பு. முடியாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்று என ஏழு எருக்கம் இலைகளை வைத்துக்கொண்டு நீர் ஊற்றிக்கொள்ள வேண்டும்.தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் நீடித்துப் பெறலாம். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் இரண்டையும் தலையில் வைத்து நீராட வேண்டும். கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் அடுத்து வரும் பிறவிகளில் தீர்க்க சுமங்கலிகளாகத் திகழ்வார்கள். ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தின்போது செய்ய வேண்டும்.அன்று சுத்தமான இடத்தை செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக பாவித்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை செய்து இரண்டையும் நிவேதனம் செய்வது வழக்கம். கோதுமை சப்பாத்தி, கோதுமை சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம்.‘ஓம் அஸ்வத் வஜாய வித்மஹேபத்ம ஹஸ்தாய தீமஹிதன்னோ, சூரிய பிரசோதயாத்’- என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை 108 தடவை சொல்லலாம்.ரதசப்தமியன்று தொடங்கும் தொழில், பணிகள் எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தான தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். சூரியன், நாம் வழங்கும் தானத்தை நம் முன்னோர்களிடம் வழங்கி, அவர்களுடைய ஆசியைப் பெற்று நமக்குத் தருகிறார்.சூரியனுக்கு உகந்தவை: தானியம் – கோதுமை; மலர் – செந்தாமரை; வஸ்திரம் – சிவப்பு ஆடை; ரத்தினம் – மாணிக்கம்; நிவேதனம் – கோதுமை ‘சக்கரைஅன்னம்; சமித்து – வெள்ளெருக்கு; உலோகம் – செம்பு.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி விழா கொண்டாடப்படுகிறது. இங்கு ஏழு மலைகள் இருப்பதால் அவற்றை ஏழு குதிரை களாக பாவிக்கிறார்கள். திருமலையில் காலை 4.30 மணி முதல் 11.30 மணி வரை ஏழு வாகனங்களில் மலையப்பன் வலம் வருவார். பிரம்மோற்சவத்தின் போது ஏழுமலையான் தினமும் ஒவ்வொரு வாகனத்தில்தான் வலம் வருவார். ஆனால் ரத சப்தமியன்று ஒரே நேரத்தில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வலம் வருவதை அர்த்த பிரம்மோற்சவம் என்பார்கள். வாயு புத்திரனான அனுமன் சூரியனிடமிருந்தே கல்வி கற்றான் என்பது புராணம் கூறும் செய்தியாகும்.மகாபாரத போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருந்தார். தான் நினைக்கும் நேரத்தில் தன் உயிர் பிரியும் வரத்தை அவர் பெற்றிருந்ததால், அவருடைய உயிர் உடனடியாக பிரியவில்லை. காலம் சென்று கொண்டே இருந்தது. பலர் வந்து பார்த்த வண்ணம் சென்றனர். அப்போது அங்கு வந்த வியாசரிடம், ‘நான் என்ன பாவம் செய்தேன். என் உயிர் போகவில்லையே’ என்று பீஷ்மர் மனம் வருந்தினார். அதற்கு வியாசர், ‘ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் தீமை செய்யாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருந்தாலும் பாவம்தான்’ என்றார்.உடனே பீஷ்மருக்கு சபை நடுவே பாஞ்சாலியின் உடைகளை துச்சாதனன் துகில் உரிந்த போது அதை தடுக்காமல் இருந்த தவறு நினைவுக்கு வந்தது. ‘இதற்கு விமோசனம் இல்லையா?’ என்று கேட்டார். அதற்கு வியாசர் ‘எப்பொழுது நீ உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டது. இருந்தாலும் கண்டும், காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது விதி’ என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னை சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர்.வியாசர் அவரிடம் எருக்க இலை ஒன்றை காட்டி ‘இந்த இலை சூரியனுக்கு உகந்தது. சூரியனின் சாரம் உள்ளது. ஆகவே அந்த இலைகளால் உன் அங்கங்களை அலங்கரிக்கிறேன்’ என்று கூறி பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். இதனால் அமைதியாக இருந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசியன்று உயிர் நீத்தார். பீஷ்மருக்கு நீத்தார் கடன் செய்ய யாரும் இல்லாததால் தர்மர் வருத்தப்பட்டார். இதுகுறித்து அவர் வியாசரிடம் கூற, அதற்கு அவர் ‘சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நாளில் நாடு முழுவதும் மக்கள் பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிப்பார்கள்.அதனால் அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவதோடு பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் பெறுவார்கள்’ என்று கூறினார். அதனால், தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், எருக்க இலையை உடலில் பல அங்கங்களிலும் வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது. ஆயுள், ஆரோக்கியம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே. தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரதஸப்தமி நாள் முதல் வடக்கு திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட, புராண நூல்கள் சொல்கின்றன.அதாவது, தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகும் நாள். ரதஸப்தமி அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம். நீராடும்போது, ஏழு எருக்கம் இலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள், கோமயம் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழ வேண்டும். வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்ட பின், தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம்.கீழ்காணும் துதியை ரதஸப்தமி தினத்தன்று பாராயணம் செய்யலாம்.ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதேஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்யத் யத் ஜன்மக்ருதம் பாபம் மயாஸப்தஸு ஜன்மஸுதன்மே ரோகம் ச ஸோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீநௌமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்த லோகைகமாதரம்ஸப்தார்க்க பத்ர ஸ்னானேன மம பாபம் வ்யபோஹய!ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்தலோக ப்ரகாஸக!திவாகர! க்ருஹாணார்க்யம் ஸப்தம்யாம் ஜ்யோ திஷாம் பதே!திவாகராய நம:இதனால் நோய்கள் நீங்கும். எருக்கம் இலை வாதத்தைக் கண்டிக்கும். எனவேதான் நம் முன்னோர்கள் எருக்க இலையை அன்று தலையில் வைத்து நீராட வழி வகுத்துள்ளனர். பித்ரு தேவதைகளை திருப்திப்படுத்த எள்ளையும், மங்களங்கள் பெருக அக்ஷதையும் வைத்து நீராட வேண்டும். இதனால் நவகிரக தோஷமும் விலகும் என்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. காலவமுனிவர் என்பவர் தனக்கு தொழு நோய் வரப் போவதை ஞான திருஷ்டி மூலம் அறிந்தார். உடனே அவர் நவகிரகங்களை வழிபட்டு தொழுநோய் பிடிக்காமல் இருக்கும் வரத்தை பெற்றார்.இதை அறிந்த பிரம்மா, வரம் கொடுக்கும் அதிகாரம் நவகிரகங்களுக்கு இல்லை என்று கோபம் கொண்டார். பிறகு அவர் நவகிரகங்களுக்கு தொழு நோய் பீடிக்க சாபமிட்டார். இதனால் நவகிரகங்களை தொழுநோய் பிடித்தது. நவகிரகங்கள் சாப விமோசனம் பெறும் வழியை அகத்தியர் கூறினார். அதன்படி எருக்கம் இலையில் தயிர் சாதத்தை வைத்து சாப்பிட்டு தொழு நோயை நவகிரகங்கள் போக்கின. ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இதனை செய்யலாம். நதியில் குளிப்பவர்கள் நதி செல்லும் திசையை நோக்கித்தான் தலை முழுக வேண்டும் இதன் பயனாக நாம் தெரிந்தும் தெரியாமலும் 7 ஜென்மங்கள் செய்த பாவங்கள் விலகும்!இப்படிச் செய்வதால் நாம் 7 பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினம் குளித்து முடித்த பின் சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும். எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது – அர்க்கியம் விடுவது – ஒரு சம்பிரதாயம். எனவே ரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் கொண்டது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். பொங்கல் வைத்து அதை சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும்.சூரியனுக்குப் படைத்த சர்க்கரைப் பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத ஸப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது பலரது வழக்கம். இந்நாளில் காலை 5 மணிக்கு எழுந்து கங்கை, யமுனை, காவிரியை நினைத்து நீர் தெளித்துக் கொண்டு, தண்ணீரில் சிறிது மஞ்சள் பொடி இட்டு எருக்க இலை முழுக்கைச் செய்த பிறகு, சூரியனது கோலத்தை வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும் போட வேண்டும். அதன் நடுவில் தீபம் ஒன்றை வைத்து, வீட்டு விளக்கையும் ஏற்றுதல் வேண்டும்.சூரியனுக்குப் பிடித்த சர்க்கரைப் பொங்கலைத் தயார் செய்து வைத்து, தேங்காய், பழம் தாம்பூலத்துடன் எளிய துதிகளால் வெள்ளை மலர் இட்டு அர்ச்சனை செய்து ஆரத்தி காட்டுதல் வேண்டும். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதஸப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை.இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சொல்கிறார்கள். ரதஸப்தமி தினத்தில் வழிபடும்போது, சூரியனை நோக்கி, ‘ஓம் நமோ ஆதித்யாய ஆயுர், ஆரோக்கிய, புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று சொல்லி வணங்கலாம். சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நன்னாள் முதல் உத்தராயண காலம் ஆரம்பிக்கும். பொதுவாக அமாவாசை, பௌர்ணமி இரண்டும் உத்திராயண, தட்சிணாயண காலங்கள் ஆரம்பிக்கும் நாட்கள், கிரஹண புண்யகாலங்களில் புனித நீர்நிலைகள், திருக்குளங்களில் கடலில் நீராடுதல் மிகுந்த நற்பலன் களை அளிக்கும்.அது போன்று ரதஸப்தமி அன்றும் புண்ணிய நதிகள், கடலில் நீராடுவது சிறப்பான பலன்களை அளிக்க வல்லது. மேலும் அன்று சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். அன்று முதல்தான் சூரியனின் ஒளி ஏற்றம் பெறுகிறது. அன்று சில திருமால் திருத்தலங்களில் ஏக தின பிரம்மோத்ஸம் நடைபெறுவது வழக்கம். ஒரே நாளில் 7 வாகனங்களில் பெருமாள் வீதிவலம் வருவார். காலை 6 மணிக்கு சூரியப்பிரபை முதல் வாகன சேவையாகவும் அடுத்தடுத்து கருடன், ஹம்ஸம், யாளி, குதிரை, சிம்மம் சந்திரபிரபை என்று வீதிவலத்தில் வெவ்வேறு வாகன சேவையும் சாதித்து கோயிலுக்குத் திரும்புவார். திருமலையிலும் ஏகதின பிரம்மோத்ஸவ வைபவம் நடக்கும். …
ரதசப்தமியன்று ஏழு வாகனங்களில் ஏழுமலையான் தரிசனம்!
previous post