கும்மிடிப்பூண்டி, மே 26: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் உணவு பொருள் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 1.5 டன் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு புதைக்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் சுற்றுவட்டார இடங்களில் அதிக அளவில் மாம்பழம் பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், மாதவரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விவசாயிகள் மாம்பழத்தை ஏற்றுமதி செய்வது வழக்கம்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு ஆரம்பாக்கம் பகுதிகளில் மாம்பழங்களை ரசாயன கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் உணவுப் பொருள் உதவி அலுவலர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் அதிரடியாக சோதனை செய்தனர்.
இதனை தொடர்ந்து, ரசாயன கல் வைத்து பழுக்க வைக்க செய்த ஒன்றரை டன் மாம்பழத்தை பறிமுதல் செய்தனர். பிறகு அவற்றை பள்ளம் தோண்டி புதைத்தனர். இது சம்பந்தமாக உணவு பொருள் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாம்பழ வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.