சேலம், ஆக.30: சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் அடுத்த மாதம் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். பின்னர் 3வது நாளில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படும். இவ்விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் அரை முதல் 12 அடி உயரம் வரையுள்ள விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படும். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சேலம் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட 3, 5, 7 வது நாட்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படும்.
சேலம் மாவட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மேட்டூர், கல்வடங்கம் உள்பட அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. சேலம் மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மூக்கனேரி மற்றும் குமரகிரி ஏரியில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. நீர் நிலைகளில் ரசாயனம் கலவையின்றி களிமண்ணால் செய்யப்பட்ட விநயாகர் சிலைகளை கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாசு கட்டுபாடு அதிகாரிகள் கூறியதாவது: சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நமக்கு குடிநீர் ஆதாரத்தை தரும் ஆறு மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டது, சுடப்படாதது, எவ்வித ரசாயனக் கலவையின்றி கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச் சூழலுக்கு நீர் சார்ந்த, மக்கக்கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவை, சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.