மேட்டூர், ஆக.15: மேட்டூரில் யானை தந்தம் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர் சேலத்திற்கு யானை தந்தங்களை ஒரு கும்பல் கடத்தி வருவதாக, வன விலங்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சேலம் மாவட்ட வன பாதுகாப்பு படையினரும், மேட்டூர் வனச்சரகர் மற்றும் வன ஊழியர்களும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோனூர் காப்புக்காட்டில் உள்ள மேச்சேரி-தர்மபுரி சாலை தெத்திகிரிபட்டி என்ற இடத்தில், ஒரு கும்பல் 2 யானை தந்தங்களை விற்பதாக கூறினர். வன பாதுகாப்பு படையினர் மாறுவேடத்தில் சென்று, தந்தங்களை ₹1.5 கோடிக்கு விலை பேசினர். இதனையடுத்து, 6 பேர் கும்பல், தெத்திகிரிபட்டி கரட்டில் தந்தம் மறைத்து வைத்திருக்கும் இடத்திற்கு வருமாறு கூறி விட்டு, 2 டூவீலர்களில் சென்றனர். மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர் முன்னிலையில், அந்த கும்பல் மண்ணில் புதைத்து வைத்திருந்த இரண்டு தந்தங்களை தோண்டி எடுத்தனர். அப்போது, வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். 4 பேர் பிடிபட்ட நிலையில், 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அந்தப் பகுதியில் பதிங்கியிருந்த மேலும் 3 தந்தம் திருடும் கும்பல் நைசாக அங்கிருந்து நழுவினர்.
விசாரணையில், அவர்கள் பொம்மிடி பொ.மல்லாபுரத்தை சேர்ந்த சேகர்(20), வாழப்பாடி அருகே, மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த பாலு (40), பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 2 தந்தங்களை கைப்பற்றினர். பிடிபட்டவர்களிடம் மேட்டூர் வனச்சரக அலுவலகத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தப்பி ஓடியவர்களில் முக்கிய குற்றவாளி மேச்சேரி திமிரிகோட்டையைச் சேர்ந்த சரவணன் (40) என்பதும், இவருக்கு உடந்தையாக ஜலகண்டபுரம் சின்னகவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (36), ஏற்காடு கொண்டயனூரை சேர்ந்த ராமர், வெங்கடாஜலம், எடப்பாடியைச் சேர்ந்த சின்னையன் இருப்பதும் தெரியவந்துள்ளது.இந்த வழக்கில் முக்கிய புள்ளி சேலத்தில் பதுங்கி இருப்பதாகவும், இதில் தொடர்புடையவர்களுக்கு கேரளாவில் உள்ள தந்தம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட யானை தந்தம், சுமார் ஓராண்டுக்கு முன்பு மண்ணில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும், 6 கிலோ எடை இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட மூவரையும் வன உயிரின குற்றத்தில் கைது செய்து, மேட்டூர் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2-ல் ஆஜர்படுத்திய வனத்துறையினர் மூவரையும் காவல்படுத்தினர்.